திருட்டு வழக்கு விசாரிக்க ரூ.20 ஆயிரம் பெற்ற SI காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கே.கே.நகர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து சங்கர் வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். சங்கர் கடந்த மாதம் 3-ஆம் தேதி பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மயமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகார் குறித்து விசாரிக்க, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்..!

அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்பது உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்டோபர் 8-ஆம் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் நிதி சார்ந்த புதிய மற்றும் பழைய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் தொழில்துறை முதலீடுகள், சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய தொல் திருமாவளவன், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூடினால், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த அமைச்சர் சு.முத்துசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில், தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவதற்காக கடைகளை கண்டறியும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக்கூட்டத்தில், 500 கடைகளை மூடுவது குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, 500 டாஸ்மாக் கடைகள் கடந்தாண்டு ஜூன் மாதம், மூடப்பட்டதால், தற்போது தமிழகத்தில் 4,829 கடைகள் உள்ளன.

மேலும், நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடு ஒப்புதல், டாஸ்மாக் கடை தவிர்த்து, 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு, மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் புதிய அறிவிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பட்டாவில் பெயர் திருத்தும் செய்ய ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது..!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம், மங்கம்மாள் புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 2002-ல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியிடமிருந்து 94 செண்டு நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். ஆனால், நிலப் பட்டாவில் கிருஷ்ணசாமிக்குப் பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மோகன், லால்குடி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில், 2024 மார்ச் 5-ல், அதை சரி செய்ய விண்ணப்பம் அளித்தார். நடைமுறையின்படி, அவரது விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி பெயர் மாற்றத்திற்கான பரிந்துரையுடன் துணை தாசில்தார் ரவிக்குமாருக்கு அனுப்பினார்.

ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜூலை 2024 முதல் துணை தாசில்தார் ரவிக்குமாரை தொடர்ந்து பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி மோகன் மீண்டும் லால்குடி தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்று, பெயர் திருத்தக் கோரிக்கையை செயல்படுத்த துணை தாசில்தாரிடம் கோரிக்கை வைக்க பெயர் மாற்ற பரிந்துரை செய்ய ரவிக்குமார் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னார் தொடர்ந்த பேச்சுவார்த்தைஇல் ரூ.20,000 குறைக்கப்பட்ட லஞ்சத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசனின் மகன் மோகன் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் சம்பத்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை துணை தாசில்தார் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் மீது அதிரடி நடவடிக்கை..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது.

அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. பல கிராமங்களில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை அனுமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெக்கி ஆப்ரேஷன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை..! குற்றப்பத்திரிக்கையில் சில திடுக்கிடும் தகவல்கள்..!

தமிழகத்தில் பகுஜுன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், ஆருத்ரா மோசடிக்கும் இதற்கும் கூட தொடர்பு இருப்பதாகச் சிலர் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையே இது குறித்து காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் பகுஜுன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே வைத்தே இவரைச் சிலர் வெட்டி படுகொலை செய்தனர். தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை தனது வழக்கமான பாணியில் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில், காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். திருவெங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் கைதாகினர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து இணையத்தில் பலவித தகவல்கள் பரவிய நிலையில், ஆருத்ரா கோல்டு மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டன.

அதாவது 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் முதலீடுகளைப் பெற்ற சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனம் இயங்கி வரும் வந்தது. இருப்பினும், சொன்னபடி வட்டி தராமல் சுமார் 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தன.

இது தொடர்பாக 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பலர் கைது செய்தது. இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சிலர், தங்கள் பணத்தை மீட்டுத் தர ஆம்ஸ்ட்ராங் உதவியை நாடியதாகவும் அதற்கான முயற்சியை அவரும் எடுத்தாக சொல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலரும் இது குறித்துப் பேசியிருந்தனர்.

இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் சில முக்கிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக ஆருத்ரா கோல்டு மோசடிக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு காவல்துறை பதில் அளித்துள்ளனர். அதாவது ஆம்ஸ்ட்ராக் அசுர வளர்ச்சியைத் தடுக்கவே கொலை நடந்துள்ளதாகவும் ஆருத்ரா கோல்டு மோசடிக்கும் இந்த படுகொலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என காவல்துறை குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் அஸ்வத்தாமன் நில விவகாரம், சம்போ செந்தில் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரம், ஆற்காடு சுரேஷ் கொலை விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை விவகாரம் ஆகியவையே ஆம்ஸ்ட்ராக் கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 6 மாதங்கள் திட்டம் போட்டு ரெக்கி ஆப்ரேஷன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றியதாக அதில் கூறப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளான். இரண்டாவது குற்றவாளியான சம்பே செந்தில் பணம் திரட்டி உதவியிருக்கிறான். மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் திட்டத்தைச் செயல்படுத்தியதாகக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பானிபூரி சாப்பிட்டது பிரச்சனையா..!? நரிக்குறவர் பெண் வீட்டு வாசலில் உட்கார்ந்து பிரச்சனையா..!?

நரிக்குறவ சமூக பெண் ஒருவரை, கொடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை போரூர் அடுத்த மாதா நகர் மெயின் ரோடு பகுதியை சுற்றிலும் நரிக்குறவர் மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்றிரவு 8 மணி அளவில், நரிக்குறவர் பெண்கள் சிலர், அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு, பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 50 வயது மதிக்கத்தக்க அந்த வீட்டின் உரிமையாளர் பைக்கில் வந்துள்ளார்.

தன்னுடைய வீட்டுவாசலில் நரிக்குறவர் பெண்கள் உட்கார்ந்திருந்த பெண்களை பார்த்ததுமே, கோபம் அடைந்துள்ளார். அந்த பெண்களை மிகவும் கேவலமாக தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். அத்துடன் விடாமல் தன்னுடைய பைக்கிலிருந்த அரிசி மூட்டையை தூக்கி வந்து, ராதா என்ற பெண்ணின் மீது போட்டுள்ளார்.

அதன் பிறகும் இவருடைய கோபம் தீரவில்லை, தன்னுடைய வீட்டிற்குள் சென்று, பெரிய விறகு கட்டையை எடுத்துவந்து, அந்த பெண்ணின் தலையிலேயே கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் ராதா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். இதைப்பார்த்து பதறிப்போன மற்ற பெண்கள், அவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் ராதாவின் தலையில் 13 தையல்கள் போடப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மாங்காடு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னுடைய வீட்டு வாசலில் நரிக்குறவர் இன பெண்கள் உட்கார்ந்திருந்ததால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம்தான் இணையத்தில் சிசிடிவி காட்சியாக வெளிவந்து சென்னைவாசிகளை பதற வைத்துள்ளது. இரவு நேரம் என்பதால், சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த பிஸியான ரோட்டில், பெண்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், இதில் மண்டை உடைந்து தரையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் விழுவதும், இந்த சம்பவத்தை சுற்றிலும் ஏராளமானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பதும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதைப்பார்த்து பதறிய பொதுமக்கள், நரிக்குறவ பெண் என்பதால் அவரை மனிதாபிமானமின்றி, வீட்டு வாசலில் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.

விஜயபிரபாகரன்: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்…! தேமுதிக எதிர்க்கட்சியாக அமரும்..!

தேனி மாவட்ட தேமுதிக சார்பில் பெரியகுளத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிக கட்சியின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் பேசிய விஜயபிரபாகரன் எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வேலை பார்க்க தயாராக உள்ளேன். எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியுள்ளார். எனவே கூட்டணி தர்மம் கருதி அதிமுக கூறினால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன்.

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக ஆகியவை தான் மக்கள் கட்சி. அவை தான் மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் 40க்கு 40 வெற்றி பெறவில்லை. 21 தொகுதிகளில் தான் திமுக நேரடியாக இருந்தது. மற்ற 19 தொகுதிகளும் அவர்கள் கூட்டணி கட்சிகளின் பலம் உள்ள தொகுதிகளை அவர்களுக்கு வழங்கி அதிலிருந்து வெற்றி பெற்றுள்ளனர்.

விஜயகாந்த் இருந்தபோது அவரை மீடியாக்கள் கிண்டலும், கேலியும் செய்து ஒதுக்கி வைத்திருந்தனர். தற்போது மக்கள் அவரை நல்லவர் என்று கூறுகின்றனர். நாங்கள் பணம் வாங்குகின்ற கட்சி என்றும், பேரம் பேசுகின்றோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை. பணம் வாங்கியதும் இல்லை. 2005-ஆம் ஆண்டு எங்களது சொந்த நிலத்தை வைத்துத்தான் மாநாடு நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகின்றோம். எனவே இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வாக்களித்தால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். தேமுதிக எதிர்க்கட்சியாக அமரும். எனவே மக்கள் புரிந்து செயல்பட வேண்டும் என விஜயபிரபாகரன் பேசினார்.

முக்கூர் என். சுப்பிரமணியன்: ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான்..!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அஞ்சூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசுகையில், “திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு சிலருக்கு தந்தவர்கள் பெரும்பான்மையான பெண்களை வஞ்சித்துள்ளனர்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றனர். ஆனால், தற்போது அது முடியாது என்று அவர்களுக்கே தெரிந்துவிட்டது. அதனால், மக்களிடம் கையெழுத்துப் பெறுகிறேன் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றினர். ஆனால், முன்னாள் முதல்வர் பழனிசாமி அரசுப் பள்ளி மாணவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை அளித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தற்போது பழனிசாமி என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களும் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். குடும்பக் கட்சியாக திமுக உள்ள நிலையில் ஜனநாயக முறையில் செயல்படும் கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. தொண்டனும் தலைவனாக கூடிய இயக்கம் நமது கழகம் ஆகும்.

எதையுமே செய்யாத திமுக அரசு விளம்பரம் செய்து பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை மக்களிடத்தில் கழகத்தினர் கொண்டு சேர்க்க வேண்டும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்” என முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருமாவளவன் கேள்வி: MGR மதுக்கடைகள் ஏலம் விட்டார்..! ஜெயலலிதா மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கினார்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

இந்த மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் தொல்.திருமாவளவன் நிறைவேற்றினார். மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசுகையில், மாநாடு தொடங்கியதும் மழை வரும் என்று பயந்தேன். இயற்கை நம் பக்கமே உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த மாநாடு பேசிய தொல் திருமாவளவன், அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை. மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அது. புத்தர் மட்டுமல்ல உலகில் எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.

தொடர்ந்து இறுதியாக பேசிய தொல் திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, கடும் பொருளாதார சிக்கல் சூழ்ந்த நிலையில், கருணாநிதி கூறிய காரணங்கள், ‘நெருப்பு வளையத்துக்குள் கற்பூரம் சிக்கியுள்ளது, அது தானாகவே பிடித்து எரியும் நிலை உள்ளது.

எனவே மதுக் கடைகளை திறக்கிறேன்’ என்றார். அன்று அவர் எடுத்த முடிவு சரி என்ற நாம் நியாயப்படுத்தவில்லை. அன்றிருந்த பொருளாதார நெருக்கடியில் அதை அன்றைய முதல்வர் கருணாநிதி சொன்னார். அதே கருணாநிதி 1974-ல் மதுக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

அதன்பின் மதுக்கடைகளை திறந்தது யார், டாஸ்மாக் எனும் மதுக்கடைகளை திறந்தது யார் என எவரும் பேசவில்லையே ஏன்? தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்பதுதான் டாஸ்மாக் என கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்பதை உருவாக்கியது எந்த அரசு, என்பது குறித்து யாரும் பேசுவதில்லையே ஏன்? இதில் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன பங்கு, ஜெயலலிதா என்ன செய்தார்? தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரான பிறகா டாஸ்மாக் வந்தது என்று கேள்வி எழுகிறது. நான் யாருக்காகவும் முட்டுக்கொடுத்து பேசவில்லை. ஆனால் உரையாடக் கூடியவர்கள், வாதாடக் கூடியவர்கள் என்ன பேசுகிறார்கள், அதில் என்ன சூட்சுமம், சூழ்ச்சி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எம்ஜிஆர் காலத்திலே மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன. ஜெயலலிதா காலத்திலே மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கியது. அது இன்று வரை தொடர்கிறது. அது தொடரும்போது மு.க.ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். ஸ்டாலின் உருவாக்கவும் இல்லை, புதிதாக திறக்கவும் இல்லை. இது குறித்தும் யாரும் பேசுவதில்லையே.

நான் முதலமைச்சரை தனியாக சந்தித்தபோது, அவர் கூறியது, நான் கடைகளை மூடக்கூடாது என சொன்னேனா, மூடவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன் என பதறிபடியே, கூறினார். ஊடகங்களில் உங்கள் கட்சியினரும் பேசுகின்றனர்; ஆனால் நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது; பார்ப்போம் என கூறினார் அவர். அதன் பின் விசிக மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் பேசும்போது, மதுக் கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பேசினேன்” என தொல் திருமாவளவன் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்: மது ஒழிப்பு மாநாடா..! இல்ல மகளிர் மாநாடானு ஒண்ணுமே புரியலே..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேற்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு திருமாவளவன் தலைமையிலான நடத்தியது. இந்நிலையில்விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்று ஒரு மாநாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்பது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியிலேயே ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். இதுதான் அவர்களின் கொள்கை. அதுமட்டுமல்ல, நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை.

மேலும் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ, நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை. அதனால், அது ஏன் அந்த வேறுபாட்டைக் காண்பிக்கிறார்கள். உண்மையிலேயே மது ஒழிப்பு என்றால் அது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கை. அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதற்காக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் குதர்க்கமாக பதியளித்தார்.