மாநகர காவல் ஆணையர் தகவல்: திருநெல்வேலியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 3 தனிப்படைகள்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன சுமார் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 கைபேசிகள் சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கூரியர் மூலம் அனுப்பினால் அதை கொண்டு வருகிற கூரியர் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரசபை தூய்மை பணியாளர்கள் நகரசபை அலுவலக வளாகத்தில் அமர்ந்து நேற்று தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும். 4 ஆண்டுகளாக பிடித்தம் செய்த பணத்திற்கு ரசீது வழங்க வேண்டும். .எஸ்.. மருத்துவ அட்டை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி: பொதுமக்கள் பஸ் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் போன்றவை செயல்படும் அரிமளத்தின் மையப்பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

ஆகவே, இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், நேற்று பஸ் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஆட்சியராக பணியாற்றி வரும் சிவராசு நேற்று சேலத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு திருப்பினார். அப்போது இரவு 10.15 மணி அளவில் சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் சென்று கொண்டிருந்தபோது தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசைக்கு திரும்பியது.

இதனிடையே அந்த வழியாக வந்த ஆட்சியரின் கார் மீது மினி லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. விபத்தில் ஆட்சியர் சிவராசுவின் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதில் கலெக்டர் ஆட்சியர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் தமிழக அரசின்  பட்ஜெட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அதன்படி குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக உயரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

 

இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு மணிமண்டபம் // தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், “சமூக நீதியின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதிரீதியான இட ஒதுக்கீடு என எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதனை சமூக நீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது. சமூக நீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அந்தத் தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது. வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டுவந்தது நீதிக்கட்சிதான்.

மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும், அதன் மூலம் அனைவருக்கும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் அதற்கு இடர்ப்பாடுகள் வந்தபோது பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டம் இந்தியத் துணைக்கண்டத்தையே கவனிக்க வைத்தது. காமராஜர், அன்றைக்கு பிரதமராக இருந்த நேருவிடம் வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

அப்படி சமூக நீதியை அடையப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றத்தைப் பெற்றுத் தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு கால சரித்திரச் சான்றை மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்துக்கான தொடர்ச்சியான வரிசையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற 20% தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 21 பேர்.

சமூக நீதிப் போராளிகளான அவர்களின் உயிர் தியாகத்துக்கும் போராட்டத்துக்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989-ம் ஆண்டு அமைந்த கருணாநிதி அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை வழங்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கான பாதையை வகுத்துத் தந்தது திமுக அரசு. சமூக நீதிக் கொள்கையின் தொடர்ச்சியாக கருணாநிதி வழியில் செயல்படக்கூடிய திமுக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும், என்பதே திமுக அரசின் உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பினை நினைவுகூர்ந்து, 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். இது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் அளித்த வாக்குறுதி. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. ‘நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவன். மிகவுன் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடமுண்டு. நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையும் பணயம் வைத்துப் போராடுவேன்’ என்று சட்டப்பேரவையில் கருணாநிதி சொன்ன உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்  அவர்களின் 49 -வது நினைவு தினத்தையொட்டி மலர் தூவி அஞ்சலி

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்  அவர்களின் 49 -வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ படத்துக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் 4 மினி டைடல் பார்க்

தமிழக சட்டசபையில் தொழில்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், இந்திய திறன் அறிக்கையின்படி அதிக வேலைவாய்ப்புள்ள மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகம் அளிக்கும் நகரங்களில் முதல் 10 நகரங்களில் சென்னை உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் பூங்காக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நில வங்கிகள் உள்ளன. தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி அந்த மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதன் மூலம் நிலக்கையிருப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சிப்காட் நிறுவனத்தால் புதிய நில வங்கிகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்குவதற்காக அந்தந்த நாட்டுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிலாநத்தம், அல்லிகுளம், வேலாயுதபுரம், நெல்லை கங்கைகொண்டான், திருவண்ணாமலை மேல்மா, ராணிப்பேட்டை பனப்பாக்கம், கிருஷ்ணகிரி சூளகிரி, குருபரப்பள்ளி, திருவள்ளூர் செங்காத்தாக்குளம், காஞ்சீபுரம் வல்லப்பாக்கம், மதுரமங்கலம், சிவகங்கை இலுப்பைக்குடி, தேனி பூமாலைக்குண்டு, நாகை வண்டுவாஞ்சேரி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி (விரிவாக்கம்) ஆகிய 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா, தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருள் தொழில்பூங்கா, திண்டிவனம் மற்றும் தேனியில் உணவுப்பூங்கா, மாநல்லூரில் மின்வாகனப்பூங்கா ஆகியவை அங்குள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உருவாக்கப்படும். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் உத்தேசித்துள்ளது. சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 50 ஆயிரம் சதுரஅடி கட்டுமானத்துடன் வர்த்தக வசதி மையத்தை இம்மாதத்தில் அமைத்து தொடக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களை டைடல் நிறுவனம் அமைக்க உள்ளது. மற்ற நகரங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை இந்த ஆண்டு வெளிச்சந்தையில் அறிமுகம் செய்ய டான்செம் நிறுவனம் உத்தேசித்துள்ளது என தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற 8-வது நாள் விளையாட்டில் இந்திய தரப்பில் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் சிங்ராஜ் அடானா 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.மகிழ்ச்சியில்  சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி

இதேபோல ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கதையும், ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய 2 தங்கம் , 5 வெள்ளி 3 வெண்கலம் என ஆகமொத்தம் 10 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் இந்திய 30-வது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு நேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த மகிழ்ச்சியை சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறியதுடன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நெத்தியடி

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற நிலையில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தை பாதுகாக்கும் விதமாக அரசு போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 10673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் முன் போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பதில் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் குட்கா பாக்கெட் கொண்டு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அது தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்தார்.

இந்த சூழலில் அதே மு.க.ஸ்டாலின் இன்றைக்கு முதலமைச்சராக உள்ளபோது போதை பொருள் விவகாரத்தை கையில் எடுத்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை கேள்வியால் மடக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலரையும் ஆச்சரியப்படும் விதத்தில் புள்ளி விபரங்களுடன் அதுதொடர்பான, பதிலை புட்டுபுட்டு வைத்தார். கேள்வி எழுப்பிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த நெத்தியடி பதிலுக்கு எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.