இளம்பெண் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

செந்தில்நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் பி.ஏ. பட்டதாரியான Esakiselvi நேற்று காலை தனது தாயாருடன் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிசெல்வி திருநெல்வேலி மாநகர கிழக்கு மண்டல துணை காவல் ஆணையர் சுரேஷ்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் என்னிடம் ஜெராக்ஸ் கடை வைக்க வேண்டும், எனவே உனது பெற்றோரிடம் ரூ.2 லட்சம் வாங்கி வா என்று கூறி என்னை துன்புறுத்தியது மட்டுமின்றி கூடுதல் வரதட்சணை கேட்டும் கொடுமைப் படுத்தினார்.

நான் முடியாது என்று கூறியதால் என்னை எனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதற்கு எனது மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து பலமுறை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் புகைப்படம் எடுத்து எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி, நீ கூடுதல் வரதட்சணை தரவில்லை என்றால் இந்த பெண்ணுடன் நான் வாழ போகிறேன் என்று மிரட்டுகிறார். எனவே, என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பேராசை பெருநஷ்டம்.. புத்தி சொல்ல வேண்டிய ஆசிரியர் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார்

ஈரோடு பழையபாளையம் விநாயகர் கோவில் வீதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் குணசேகரன் என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், என்னுடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்செய்தி வந்தது. அதில், ‘வீட்டிலிருந்தே வேலை செய்து தினமும் ரூ.2 ஆயிரம் சம்பாதிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து குணசேகரன் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

அதற்கு அவர்கள் ஒரு இணையதள முகவரி கொடுத்து அதில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அதன்படி நானும் பதிவு செய்தேன். இதையடுத்து ரூ.200-க்கு ரீசார்ஜ் செய்து ரூ.100 சம்பாதித்து ரூ.300 திரும்ப பெறலாம். ரூ.500-க்கு ரீசார்ஜ் செய்து, ரூ.650 திரும்ப பெறலாம். இவ்வாறாக ரூ.50 ஆயிரம் வரை திட்டங்களை கூறினார்.

அதை நம்பிய குணசேகரன் முதல் நாளில் ரூ.100 கணக்கிலும், அடுத்து வந்த நாட்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் ரீசார்ஜ் செய்தும் பணம் பெற்றுள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதி ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து, ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பெற விண்ணப்பித்தேன். 72 மணி நேரத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றனர்.

அதன் பின்னர் கடந்த மாதம் 22-ந்தேதி ரூ.10 ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் செய்து ரூ.13 ஆயிரம் வரை திரும்ப பெற்றேன். 23-ந்தேதி ரூ.10 ஆயிரத்தில் தொடங்கி ரூ.3 லட்சம் வரை ரீசார்ஜ் செய்து முடித்து ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் பெற விண்ணப்பித்தேன். அப்போதும் தொகை அதிகமாக இருப்பதால் 72 மணி நேரத்துக்கு பின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் இதுவரை வரவில்லை.

பண பரிமாற்றம் முழுவதும் வங்கி கணக்கில் நடந்தது. எனவே நான் இழந்த ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குணசேகரன் தெரிவித்துள்ளார்..

14 ஊராட்சி ஒன்றியங்களில் 600 இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 445 கிராமங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது.

அரசு கட்டிடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீரை தேக்கி வைத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 600 இடங்களில் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த 600 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளையும் 21 நாட்களில் அமைத்து உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள புதுப்பாளையம் சாலையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் ஆவார். இவர் 15 பேருக்கு சத்துணவு திட்டத்துறையில் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோரிடம் ரூ.76½ லட்சம் வழங்கியதாகவும், ஆனால் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை எனவும் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 29-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 1-ந் தேதி அந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் 2-வது முறையாக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

சென்னை மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கிறது… விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை…

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருந்த நிலையில். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பை விட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இரவு முழுக்க வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. தொடர்ந்து மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பொழுது, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்களின் நடவடிக்கை குறித்து நாமக்கல் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் சாலை பணியாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மழை கோட், கடப்பாரை, மண்வெட்டி போன்ற பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை ஆகவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி நகை, பணம் பறிப்பு

தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 23 வயது பெண் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார். அவருடன் பணியாற்றும் பட்டாபிராமை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், தன்னிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணம், 22 பவுன் நகையை ஜீவரத்தினம் பறித்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி வருவதால் சூளைமேடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்து இருந்தார்.

மேலும் அந்த புகாரில் ஜீவரத்தினத்தின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் சூளைமேடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜீவரத்தினம் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.

காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்த லோகநாதன் மகன் விஷால் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் விஷால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். கடந்த 5-ந் தேதி விஷால் தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி திருநாகேஸ்வரம் கடைவீதியில் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாணவர் தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல்துறையினரை கண்டித்து நேற்று மீண்டும் நூற்றுக்கு மேற்பட்டோர் திருநாகேஸ்வரம் கடைவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம், 12 மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக, கல்வி துறை சார்பில், செயல்படுத்தப்பட உள்ளது. இந்தநிலையில், தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது அதில்,

* சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்

* எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக பணியாற்றுவோரைத் தேர்வு செய்தல் கூடாது

* விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம்

* பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்

* கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும்.

* குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்

* இணையதளங்களில் பதிவு செய்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

* பள்ளிகள் வாயிலாக தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய / மாவட்ட அளவிலான குழுக்கள் சரிபார்த்தல் அவசியம்.

* தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இரு நாட்களுக்கு “ரெட் அலர்ட்” பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் பெரும்பாலும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.


இதனால் சென்னை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னைக்கு இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன். இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என பதிவிட்டுள்ளார்.