அண்ணாமலையோட நீண்ட கால ஆசை இதுதான்..

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கடுமையாக சாடி விமர்சித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து முழு வீச்சில் அண்ணாமலை பாஜகவை தயார் படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். இதனிடையே அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இன்று செய்தி பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் ‘அண்ணாமலைக்கு ஆசை ஒரு பக்கம், பீதி ஒரு பக்கம், விளம்பரம் ஒரு பக்கம்’ என்று கடுமையாக சாடியுள்ளார். காயதிரி ரகுராம் தனது ட்விட் பதிவில், அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பாஜகவில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை: தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே. வாயில் வடை.

அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பாஜகவுக்கு தெரியும், அவரால் தமிழக எம்பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி) .

இப்போது அவர் இல்லாமல் தமிழக பாஜக மூழ்கிவிடும். தமிழக பாஜகவுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை)” என்று சாடியுள்ளார்.

வயிற்று வலியால் துடித்த மகள்.. வந்தவாசி அரசு மருத்துவர் அலட்சியம்..

திருவண்ணாமலை மாவட்டம், வெண்குன்றத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதியான தியாகராஜனின் மகளுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், அங்கு பணியில் இருந்த மருத்துவர் அலட்சியமாக மருத்துவம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த தியாகராஜன் மருத்துவமனை எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மகளுடன் சாலை மறியல் நடத்தினார்.

அவ்வழியே அரசுப் பேருந்து ஒன்று வந்த நிலையில், சாலை மறியலால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தியாகராஜனுடன் சமாதானம் பேசினர். இதையடுத்து தன் மகளுக்கு சிகிச்சை பார்க்காமல் தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

எஸ்.வி.சேகர்: அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்.. நடைபயணம் கூட டாக்டர் அட்வைஸா இருக்கும்.. !

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் மூத்த நிர்வாகிகளுக்கு அண்ணாமலை மரியாதை கொடுத்து, எதையும் ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசல் புரசலாக இருந்து வந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டை எஸ் வி சேகர் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

அண்மைக்காலமாக அண்ணாமலையை எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் வி சேகர் கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நானும் செய்திகளில் பார்த்தேன். அனேகமாக அவருக்கு சுகர் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. தினமும் நடக்க வேண்டும் என டாக்டர் கூறியிருக்கலாம். அதனால் தான் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். எனவே நடைப்பயணத்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.

சும்மாவே மிஸ்டு காலை வைத்துக் கொண்டு எங்கள் கட்சியில் இத்தனை பேர் உள்ளனர் என கூறுவதெல்லாம் நம்மை நாமே புகழ்ந்து கொள்வது. தற்போது நடைபெறும் ஆபரேஷன், தேர்தல் முடிவான போஸ்ட்மார்டத்தில் தெரிந்து விடும். பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார். பாஜக 300 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தும். ஆனால் இது அண்ணாமலை உதவியால் கிடையாது. இவ்வாறு எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்தார்.

எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு

சென்னையில் எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராயநகர், சாம்பசிவம் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோகரன். இவர், சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நான் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளேன்.

2013-ம் ஆண்டு முதல் எல்.ஐ.சி.யில் பாலிசிதாரராக சேர்ந்து பணம் கட்டி வருகிறேன். இடையில் கொரோனா தொற்று நோய் காலத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் மூலமாக பணம் கட்டினேன். ஆனால் அவர் நான் கட்டிய பணத்தை முறையாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் கட்டாமல் மோசடி செய்து விட்டார். எல்.ஐ.சி. நிறுவனத்தின் ரசீதை போல போலியான ரசீதையும் தயாரித்து கொடுத்து விட்டார். அவர் என்னிடம் ரூ.2½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு, காவல் கண்காணிப்பாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, துணை கண்காணிப்பாளர் மீனா, உதவி கண்காணிப்பாளர் ஜான்விக்டர் ஆகியோர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்ணாவை ஸ்டிக்கராக மட்டும் பார்க்கும் அதிமுக..!

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.’

”அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள்.”

”அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”

”’ஏ, தாழ்ந்த தமிழகமே!’ என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.”

மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை..! கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்…!

தமிழக அரசு மகளிர் திட்டம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட அலுவலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மகளிர் திட்ட இயக்குனராக ரேவதி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திட்டத்திற்கு பயனாளிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன், காவல் ஆய்வாளர் பீட்டர் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக நேற்று மாலை 4 மணிக்கு மகளிர் திட்ட அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி அறையில் இருந்து ரூ.2 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து கைப்பற்றினர். இந்த பணத்திற்கான ஆவணங்களை அவர் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தை எடுத்து சென்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா, இவரின் கணவர் அருள்லால். தேவிபிரியா அருள்லால் தன்பாதியினருக்கு மோனிகா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில், திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு மனையை பத்திர பதிவு செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மீது புகார்…!

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான ஜெயகோபால், ஜெயராமன் ஆகிய இருவரும் தனது தந்தை ஆளவந்தார்சாமி பெயரில் உள்ள வீட்டு மனையை சகோதரர்கள் இருவரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள முடிவு செய்து அதற்காக வளவனூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யும்படி முறையிட்டுள்ளனர்.

அப்போது ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த போது வில்லங்கம் சான்று கேட்டுள்ளனர். அதில் வில்லங்கம் இல்லையென சான்று பெற்று வரக்கூறியுள்ளனர். வில்லங்கம் இல்லையென கிராம நிர்வாக அலுவலர் சான்று அளித்துள்ளார். வில்லங்க சான்று இல்லையென என்ற சான்றுடன் சென்ற நபரிடம் மனையை பத்திர எழுத்தர் மூலம் பதிவு செய்யும் படியும், அதற்காக ஐம்பதாயிரம் செலவு ஆகும் என கூறி அனுப்பியுள்ளனர்.

மனை பதிவு செய்வதற்கு அனைத்தும் சரியாக உள்ளபோது ஏன் பத்திர எழுத்தரிடம் நாங்கள் செல்லவேண்டுமென கேட்டபோது, பத்திர பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் பூங்காவனம் லஞ்சம் தரவேண்டும் என தெரிவித்து பத்திர பதிவு செய்ய முடியாதென அனுப்பியுள்ளனர். இதனால் மனை பத்திர பதிவு செய்யமுடியாமல் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் பத்திர பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல லட்சம் மோசடியில் இழந்த அப்பாவி மக்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா மதுரைபெருமட்டூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தில் முகவர்கள் மூலமாக நீண்ட மற்றும் குறுகிய கால வைப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டம், மாதாந்திர வைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை தெரிவித்து வைப்புத் தொகைகளுக்கு குறுகிய காலத்தில் பல மடங்கு முதிர்வு தொகை கொடுப்பதாக கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர்கள் முகவர்களாக இருந்த காரணத்தினால் நாங்கள் ரூ.200 முதல் ரூ.2000 வரை என மாதாந்திர வைப்பு திட்டத்தில் 60 மாதங்கள் பணம் செலுத்தினோம். மேலும் பலர் ஒரே தவணையாக பணத்தை செலுத்தி உள்ளனர். எங்கள் கிராமத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.

முதிர்வு தேதி முடிந்த பிறகு பணம் கொடுக்கவில்லை. முகவர்களாக செயல்பட்ட நபர்களும் உரிய பதில் அளிக்கவில்லை. நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள். எனவே எங்கள் பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை செய்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருக்கலைப்பு விவகாரம்.. 12 லட்சம் லஞ்சம் வாங்கிய .. பெண் ஆய்வாளர்…!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ரஞ்சித் என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் அடைய செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வழக்கு பதிவு செய்தார்.

17 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கியதாக ரஞ்சித்தை காவல்துறை கைது செய்தனர். அதேபோல் தனியார் மற்றும் அரசு மருத்துவர்களிடம் சென்று அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக காவல்துறையிடம் அந்த சிறுமியின் தாய் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஞ்சித் மீது போக்கோ வழக்கினை பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்யதாக கூறப்படும் அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யதாக 2 லட்சம் பணமும் என 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வாங்கியதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆய்வாளர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.