எடப்பாடி பழனிசாமி, அவரது நிலத்தை அதிக பணம் கொடுத்து கேட்டால் கொடுப்பாரா…

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம், வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறை கைது செய்தனர்.

மேலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கலவரத்தை கலைத்தனர். இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த முற்றுகை போராட்டத்தின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “டெல்லியில் போய் போராடிய தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் கடலூர் மக்களுக்காக களத்திற்கு இன்னும் வராதது ஏன்? கதிர் பிடித்திருக்கும் வயலை அழிப்பது வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கு சமம். கடலூர் மாவட்ட மக்களுக்கும், மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்.எல்.சி.

என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக்கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சனை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இது நமது உரிமைக்கான பிரச்சனை. 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை.

ஒரு பக்கம் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, மறுபக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. நிச்சயம் இதை விடமாட்டேன். திருச்சியில் வேளாண் சங்கமத்தை தொடங்கி வைத்து விட்டால் விவசாயிகளை, விவசாய நிலங்களை காப்பாற்றி விட முடியுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

என்.எல்.சி விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் எனக் கூறி இருந்தார். அதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது விலையை கொஞ்சம் ஏற்றி என்.எல்.சி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் அவரைக் கேட்கிறேன்.. அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?” என சரமாரியாக அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் ஒட்டி ரூ. 500 கோடி முறைகேடு…!

தமிழ்நாடு போக்குவரத்து துறை ரூ 1,200 மதிப்புடைய பிரதிபலிக்கிற ஸ்டிக்கரை, குறிப்பிட்ட 5 நிறுவனங்களிடம் தான் ஒட்ட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து வண்டிக்கு ரூ.4,200 கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதாகவும் , ரூ.800 மதிப்புடைய வேககட்டுப்பாட்டு கருவி ரூ. 4,000 மேல் விற்கப்படுகிறது என்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய போக்குவரத்து துறை அங்கீகரித்த 15 நிறுவனங்களிடம் இருந்து ஸ்டிக்கர் பெறாமல், வெறும் 5 நிறுவனங்களிடம் மட்டுமே ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் லாரி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தபடுவதாகவும் , தங்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஏற்கனவே நல்ல முறையில் இருந்தாலும் அதன் மீது மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் யுவராஜ் வேதனை தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும், போக்குவரத்து ஆணையருக்கும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என யுவராஜ் தெரிவித்தார்.

1950-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்யலாம்

பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக கடந்த 2000-ம் ஆண்டு பிப்.6-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமத்தில் ஸ்டார் 2.0 என்ற திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த 1975-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்துக்குரிய அட்டவணை-2 பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, கடந்த 1950-ம் ஆண்டு ஜன 1 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த 1950 ஜனவரி 1 முதல் 1974 டிச.31 வரையிலான காலத்துக்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் இந்த காலகட்டத்துக்கான அட்டவணை-2 பதிவேடுகளை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுஅளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிவடைந்ததும் கடந்த 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும் என தெரிவித்தார்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறை (பொறுப்பு) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும், 2 பெண்களும் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த காவல்துறை, மேலாளர் லட்சுமி தேவியை கைது செய்தனர். விசாரணையில், திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செந்திலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்திலை விபசார தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லஞ்சம் கேட்ட தமிழர் கட்சி ஊராட்சி தலைவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார். சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அப்துல்லா அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ..25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறைருக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார். அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்..!

திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூர் கிராமத்தில் ஓசூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணத்தை எடுப்பதற்காக அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளர்கள் கலைவாணர் மற்றும் உஷா ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு இந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்தனர்.

தங்கள் கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் ரூ.12 லட்சம் செலவில் நடத்தியதாகவும் இந்த பணத்தை கொடுத்துவிட்டு நீங்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் கிராம மக்களுடன் காவல்துறையினரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கல்

கோயம்புத்தூர் மாவட்டம், சூளேஸ்வரன்பட்டி .எம். ஜி. நகரில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு வழங்கி ஸ்மார்ட் வகுப்பினை துவக்கி வைத்தார். இனிய நிகழ்வில் பேரூராட்சி அதிமுக கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் திரளான மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தென்னாப்பிரிக்கா ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை…!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். அது நேராக ஒரு கடன் செயலிக்கு சென்றது. இதனால் தனது தேவைக்காக ராஜேஷ் கடன் வாங்கினார். இந்த நிலையில் வாங்கிய கடனை வட்டி, அசலுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே திருப்பி கொடுத்துவிட்டாராம். ஆனாலும் ஆன்லைன் மூலம் கடன் வழங்கிய லோன் ஆப் நிறுவனத்தினர் வாட்ஸ் ஆப் மூலம் ராஜேஷை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் வந்து ராஜேஷை வீடியோ எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதை நிர்வாணமான ஒரு உடலுடன் ஒட்டி அதை காட்டியும் ராஜேஷை மிரட்டியுள்ளனர். ஆனால் ராஜேஷோ எல்லா பணத்தையும் கொடுத்த பிறகும் மீண்டும் எதற்காக பணம் கேட்கிறீர்கள். மீண்டும் பணம் கேட்டால் செலுத்த முடியாது என்றாராம். இதனால் ஆத்திரமடைந்த லோன் வழங்கிய நிறுவனத்தினர் ராஜேஷின் உறவினர்களுக்கெல்லாம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பினர்.

இதையடுத்து சொந்தக்காரர்கள் எல்லாம் ராஜேஷை ஒரு மாதிரியாக பேசியதாக கூறப்படுகிறது. இத்துடன் விடாமல் லோன் ஆப் நிறுவனம் நீ நாங்கள் கேட்கும் பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளங்களில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். ராஜேஷை மீட்ட உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அப்போது ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த வலங்கைமான் காவல்துறை ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஷ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் அவருக்கு வந்த வாட்ஸ் ஆப் கால் அனைத்துமே தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது… மேலும் ஒருவர் தலைமறைவு.!

சென்னை, அம்பத்தூர், பச்சையப்பன் பிரதான சாலையைச் சேர்ந்த சத்ய நாராயணன், அவரது மனைவி ஷாலினி, மாதவரம் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமஸ் ஆகியோருக்கு திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தைச் சேர்ந்த காயத்ரி அறிமுகமாகியுள்ளளார். சத்ய நாராயணன், தனக்கு பல அரசியல் கட்சியினர் தெரியும், அவர்கள் மூலமாக, கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக காயத்ரியிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்விளைவாக, காயத்ரி உள்ளிட்ட 8 பேரிடம் சத்ய நாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.74 லட்சம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆனால் சத்ய நாராயணன் சொன்னதுபோல வேலை வாங்கித் தரவில்லை. ஆகையால் காயத்ரி உள்ளிட்ட மற்ற 8 பேரும் சத்ய நாராயணன் பணத்தை திருப்ப கேட்டுள்ளனர். இந்நிலையில், காயத்ரி அம்பத்தூரில் உள்ள சத்யநாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் மூவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2021-ல் காயத்திரி மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். இதை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஷாலினி மற்றும் தாமஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் சத்ய நாராயணனை தீவிரமாக தேடுகின்றனர்.

ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்த பாஜக பிரமுகர் இயக்குநராக உள்ள நியோமேக்ஸ் நிறுவனத்தில் ரெய்டு

மதுரையை தலைமையிடமாக கொண்டு இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜக பிரமுகரான வீரசக்தி மற்றும் பலர் உள்ள நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனத்தின் கீழ் கர்லாண்டோ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் உள்ளிட்ட 5 கிளைகள் செயல்பட்டன. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை மற்றும் திருச்சி என பல இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன.

தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும் பணத்தை இரண்டரை முதல் 3 ஆண்டில் இரட்டிப்பாக தருவதாகவும் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ரூ.10 லட்சம் முதல் ரூ. 1 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.

இந்நிலையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், பாஜக பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 24-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, மதுரை காளவாசல் அருகே உள்ள நியோமேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து, சகாய ராஜா ஆகிய நியோமேக்ஸ் கிளை நிறுவனங்களின் 4 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாஜக பிரமுகரான வீரசக்தி தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நியோமேக்ஸ்க்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நேற்று திடீர் ஆய்வு நடத்தி, அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு முக்கிய சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.