பழங்குடியினர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி…! ஆட்சியர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக நடையாய் நடந்தும் பயனிலை…!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி ஊட்டி விவசாய நிலத்தை ஒருசிலர் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலை முயற்சி நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் ஊட்டி அருகே கோக்கால் கிராமம் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 13 வயது மகள் உள்பட 6 பேருடன் வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென தங்களின் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக அவர்கள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தற்கொலைக்கு முயன்ற மோகன் குமார் கூறிகையில், கோக்கால் பகுதியில் எங்கள் தாய் வழி சமூகம் மூலம் எனக்கு பாத்தியப்பட்ட பாரம்பரிய நிலத்தில் 6 ஏக்கரை ஒருசிலர் ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நிலத்தின் சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எங்களது பெயரில் உள்ளது. இதுகுறித்து காவல் நிலையம், ஆர்.டி.ஓ., ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் சுமார் 40 சென்ட் நிலத்தில் கேரட் பயிரிட்டோம். ஆனால் ஒருசிலர் கேரட்டை அழித்துவிட்டு அவர்கள் தற்போது அவரை பயிரிட்டு உள்ளனர். நாங்களோ எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் பழங்குடியின நிலத்தை பழங்குடியின சமுதாயம் அல்லாத ஒருவர் வாங்கியுள்ளார். எனவே போலியாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

திருநாவுக்கரசர்: ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர் ..!

புதுக்கோட்டையில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 1989-ல் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்தும், திருநாவுக்கரசர் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வதாக பேசியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஜெயக்குமார் எந்த காலத்தில், அதிமுகவில் சேர்ந்தார்? எந்த காலத்தில் அதிமுகவில் இருந்தார்? என்று எனக்கு தெரியவில்லை. எம்ஜிஆரை எல்லாம் அவர் பார்த்திருக்கிறாரா? என்றும் எனக்கு நியாபகம் இல்லை. அவர் ஜெயலலிதாவிடம் எப்போது வந்து சேர்ந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, ஜெயலலிதாதான் எனக்கு நன்றிக்கடன் பட்டவரே தவிர, நான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவன் கிடையாது.

நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். நான் காப்பாற்றியதால் தானே மீண்டும் அவர் முதல்வரானார். நான் காப்பாற்றியதால் தானே, இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி சாப்பிட்டு சவுகரியமாக இருக்கின்றனர். அப்போது ஜெயலலிதா எனக்கு நன்றியாக இருக்கவேண்டுமா? நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்கவேண்டுமா?. ஜெயலலிதாவுக்கு நான் நிறைய செய்திருக்கிறேன்.

ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல்தான் செய்துள்ளார். அதுமுடிந்துபோன விஷயம். அவர் பாவம் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எனக்கும், ஜெயக்குமாருக்குமா பிரச்சினை? எனவே, அதிமுகவினர் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதாதான் என்னிடம் உண்டு உள்ளார். நான் அதிமுகவில் உண்ணவே இல்லை. உண்ணாமல் எப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும்?” என தெரிவித்தார்.

77-வது சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்க காத்திருந்த பெண் காவலர் திடீர் மயக்கம்…!

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்ள இருந்தார். அப்பொழுது காவல்துறை அணிவகுப்பில் பங்கேற்க காத்திருந்த பெண் காவலர் ஒருவர் திடீரென மயக்கமடைந்தார். ஆகையால் அருகில் இருந்த காவலர்கள் அவரை தூக்கி சென்று நாற்காலியில் அமரவைத்து வைத்தனர்.இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.

முத்தரசன் குற்றசாட்டு: டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாநில செயலாளர் முத்தரசன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பாஜக பிரச்சார அலுவலகம்போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை பெற்றுத்தர வேண்டும்.

மத்திய அரசு டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்பு…!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தி பேசினார். இதில், ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஜொமோட்டோ, ஸ்விங்கி, ஓலா போன்ற சர்வீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு என விரைவுச் சேவை நல வாரியம் அமைக்கப்படுகிறது. அவர்களை வாழ்க்கை மற்றும் பணிகள் முக்கியமானது. அவர்களை காக்கும் விதமாக இந்த நல வாரியம் அமைக்கப்படும். விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிமுக மதுரை மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டம்…! எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு…!

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், எழுச்சி மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் 500 பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். ஜோதி தீபத்தை ஏற்றி, மாவட்ட செயலாளர் அசோக்கிடம் பழனிசாமி வழங்கினார். இந்த ஓட்டம், அடையாறு, பள்ளிக்கரணை, செங்கல்பட்டு வழியாக மதுரை நோக்கி செல்கிறது. இந்த ஜோதி, மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும்.

கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடிக்கு முதல் வணக்கம். அதன் நிழலில் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல் வணக்கம்.

இந்திய ஒன்றியத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அண்ணா முதலமைச்சர் ஆன பிறகுதான் 1967, ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. ஒரே ஒரு சங்கரலிங்கனார்தான் உயிரிழந்துள்ளார் என்று நினைப்பீர்களேயானால், 5 உயிர்களைத் தர தயாராக இருக்கிறோம் என தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. சென்னை மாகாணத்தின் பிற மொழி பேசும் எல்லா பகுதிகளும் தனித்தனி மாநிலங்களாக பிரிந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என பெயரிடக்கூடாது என கேட்டவர் பெரியார்.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் 3-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இதற்கான வாய்ப்பை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி.

நீட்டில் தோல்வியை விடுங்க.. நீட் தேர்வே தோற்றுவிட்டது.. !

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வால் மாணவன் தற்கொலைதந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது.

நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இது தான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு, எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்? நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்ட தேர்வு. அதை தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்….. நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபடும் பேரன்கள் மற்றும் பேத்திகள்…!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி தாண்டாக்கவுண்டன் புதூர் அருகே உள்ள அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து, இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியிலுள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து போது மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார்.

இந்நிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் காலமானார்கள். அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.

ஆனால் பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு சிலை வைக்க அவரது பேரன்கள், குடும்பத்தினர், உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கு கோவில் கட்டி முழு உருவச்சிலை வைத்தனர். அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்றுமுன்தினம் வேம்பு அரச மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதனையடுத்து அய்யமுத்து-அய்யம்மாள் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்துடன் அவர்கள் வழிபட்டனர். தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள் மற்றும் பேத்திகளின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லாட்ஜூக்கு பெண்களை அழைத்து செல்லும் ஆண்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிப்பு..!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் 27-ந்தேதி பெண் ஒருவரை அரும்பாக்கம் பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். அப்போது அவரிடம் காவல்துறை என்று கூறி ஒருவர் ‘கூகுள் பே’ மூலம் ரூ.15 ஆயிரம் பெற்றார். பின்னர், மணிகண்டனிடம் அந்த நபர், விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறி சென்றார்.

அதன்படி, மணிகண்டனை அந்த நபர் 28-ந்தேதி அன்று செல்போனில் அழைத்து ஆணையர், ஆய்வாளருக்கு பணம் தரவேண்டும் என்று கூறி மீண்டும் அவரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் பெற்றார். பின்னர் மணிகண்டனிடம் இதே பாணியில் ரூ.12 ஆயிரத்து 500 பணமும், அவர் அணிந்திருந்த 4 பவுன் மோதிரத்தையும் கடந்த 2-ந்தேதி பறித்துள்ளார். அந்த நபர் பணம் கேட்டு மணிகண்டனை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அரும்பாக்கம் லாட்ஜ் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் வந்திருந்த ‘போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த மொபட் வாகனத்தின் எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாகனம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பின்னர் அந்த பெண் காவலரிடம், காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், தன்னுடன் தங்கி இருக்கும் பாலாஜி என்பவர்தான் அன்றைய தினம் எனது மொபட் வாகனத்தை ஓட்டி சென்றார் என்று கூறினார்.

இதையடுத்து பாலாஜியை காவல்துறை கைது செய்தனர். இதில்,  தியாகராயநகர் முத்துரங்கம் சாலை பகுதியை சேர்ந்த பாலாஜி என தெரியவந்தது. பாலாஜி 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலை தனக்கு கிடைக்காததால் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும், மணிகண்டனை மிரட்டி பறித்த ரூ.92 ஆயிரத்து 500 பணத்தை ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், 4 கிராம் தங்க மோதிரத்தை அடகு வைத்து செலவு செய்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.