பிரதமர் நரேந்திரமோடி 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி நள்ளிரவில் டெலிவிஷனில் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல்‘ ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என அறிவித்தார்.
இதை தொடர்ந்து பொதுமக்கள் கால்கடுக்க வங்கிகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்து கிடந்ததன விளைவாக சுமார் 80-க்கும் மேற்பட்ட உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.மக்கள் படும் சிரமங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை தொடர்ந்து கோவாவில் உரையாற்றிய நரேந்திர மோடி தனக்கு 50 நாட்கள் அவகாசம் தரும்படியும் , அதற்குள்ளாக இந்த பிரச்சினைகளை சரி செய்து விடுவேன் அல்லது நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .
பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கருப்பு பணம் ஒழிந்ததா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது . பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்தது. இந்நிலையில், பிரியங்கா காந்தி இன்று மத்திய அரசுக்கு 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடைபெற்றது வெற்றிகரமான நிகழ்வு என்றால் ஊழல்கள் முடிவுக்கு வந்து விட்டதா? கருப்பு பணம் மீண்டும் இல்லையா? பொருளாதாரம் ஏன் முழுக்க முழுக்க பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் மாறவில்லை? இன்னும் எதற்காக தீவிரவாத செயல்கள் அரங்கேறுகின்றன? விலைவாசி எதற்காக உயர்கிறது? இவ்வாறு பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில் கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.