மு.க. ஸ்டாலின்: “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி”

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாராயணன் திருப்பதி: தீவிரவாத, பிரிவினைவாத பேச்சு.. திகார் சிறைக்கு அனுப்பினால் தான் வேல்முருகனுக்கு அறிவு வரும்..!!

ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் வேல்முருகனுக்கு அறிவு வரும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அப்போது, “எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.

இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார். நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.” என ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் வேல்முருகன் ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்தில் அவரை கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், “வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமரை ஒருமையில் பேசி, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்தியாவின் நிதி அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வன்கொடுமை சட்டத்திலும், ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

மேலும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் செயல்படும் இந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது என்ஐஏ வழக்கு பதிந்து, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் இந்த நபருக்கு அறிவு வரும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தன் பொறுப்பிலிருந்து கடமை தவறி விட்டதாகவே கருதப்படுவார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கச்சேரி வைத்துக் கொள்வதாக சபதமிட்டுள்ளார். முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா! சிறையில் களி தின்ன ஆசையா வேல்முருகா?” என நாராயணன் திருப்பதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசையை விளாசிய ராஜ்மோகன்: பேரில் இருக்கும் தமிழ் ஊரிலும் இருக்கட்டும்..!

இரு மொழிக் கொள்கையில் படித்த தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநர் ஆகவில்லையா என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜமோகன் கேள்வி எழுப்பி உள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்ததன் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

இதையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த விஜய்க்கு பதிலடி கொடுத்திருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இது தொடர்பாக பேசிய அவர்,” மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

ஆனால் அவர் கருத்து சொல்லக் கூடாது. தனது படங்களை தமிழில் மட்டும் தான் வெளியிடுவேன் என சொல்ல வேண்டும். விஜயின் படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் கூட வெளியாகிறது. வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழிக் கொள்கை தேவை, ஆனால் மாணவர்கள் மூன்று மொழிக் கொள்கை மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? என பேசி இருந்தார்.

இந்த தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில்,” நீங்கள் வேண்டுமானால் ஒரு மனிதனை இந்துவாய், இஸ்லாமியனாய், கிருத்தவனாய்ப் பார்க்கலாம். அவர்கள் மூவரையும் மனிதனாக மட்டுமே பார்க்கும் உயர்ந்த இடம் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள். பயிற்று மொழியாக தமிழ் மொழி. இணைப்பு மொழியாக ஆங்கிலம். இந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை. மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்? இப்படி ‘மும்மொழிக் கொள்கை’ என்ற பெயரில் நடக்கும் நவீன இந்தித் திணிப்பை தட்டிக்கேட்ட எங்கள் தலைவரை, பல மொழிகளில் அவரது படங்கள் வெளியாவதை, திரைப்படப் பாடலை, குடும்பத்தினர் படிக்கும் கல்விச் சாலையை எல்லாம் இழுத்து, திரித்து எழுதியுள்ளார் பாஜகவைச் சார்ந்த மதிப்பிற்குரிய திரு H.ராஜா அவர்கள்.

திரைப்படம் தொழில், கல்வி என்பது தொண்டு, தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தனிமனிதர் வேறு; அரசின் கொள்கை வேறு. மாநில தன்னாட்சி உரிமை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை அனைத்தும் தனித்துவமானது. யார் எங்கு படிக்கிறார் என்பது தனிநபர் விருப்பம். ஆனால் ஓர் அரசு எந்த மொழியில் கற்றுக் கொடுக்கிறது என்பது கொள்கை.

இத்தனை சீரியசான பிரச்சனைக்கு ஆதாரமாய் சினிமா பாடலையா கொண்டு வருவீர்கள்? ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டாய் மாறுவதற்கு மும்மொழி வேண்டுமாம். அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். நிலாவைக் காட்டி சோறு ஊட்டியவர்கள் மத்தியில் அந்த நிலவுக்கே சந்திராயனை ஊட்டிய அறிவியல் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்காதவர்கள்தான். இது உங்களுக்கும் உங்கள் அட்மினுக்கும் தெரியாதா? மதிப்பிற்குரிய அக்கா மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், எங்கள் தலைவர் இது குறித்துப் பேசக்கூடாது என்கிறார்.

இவர்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னால் யார் வீட்டுக் குழந்தை எங்கு படிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி தமிழிசை அவர்களே.. நீங்கள் எங்கு படித்தீர்கள்? இருமொழிக் கொள்கையில் படித்த நீங்கள் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநராகவில்லையா? உங்கள் பேரில் இருக்கும் தமிழ் நம் ஊரிலும் இருக்கட்டும். தமிழ் எங்கள் பேச்சு. தமிழ் எங்கள் மூச்சு.” என ராஜ்மோகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: வெறிநாய்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் கண்டனம்: மும்மொழிக் கொள்கையை திணிப்பது மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும்..!

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது.

அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துகு நிதி ஒதுக்க முடியாது.” என தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

மும்மொழிக் கொள்கை குறித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் தவெக தலைவர் விஜய்யும் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை கேள்வி: கையாலாகாத சுகாதாரத்துறை..! இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்..!?

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்?

இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? திமுக கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போஸ் வெங்கட் சவால்: அண்ணா அறிவாலயத்தின் சுவரை சும்மா தொட்டுதான் பாருங்க..!

சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்த அண்ணாமலையின் பேச்சுக்கு நடிகர் போஸ் வெங்கட் தமது எக்ஸ் பக்கத்தில், அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல.. அது ஒவ்வொரு ஏழை தி. மு. க தொண்டனின் குருதி,நம்பிக்கை. நாளைய தலைமுறையின் அறிவுக்கூடம்.. வாருங்களேன் தோழர் அண்ணாமலை… /சும்மா தொட்டுத்தான் பாருங்களேன்.. / என நடிகர் போஸ் வெங்கட் எக்ஸ் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

திமுக கண்டனம்: “தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி”

சென்னையில் “அகத்திய முனிவர் நடைபயணம்”என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டது, தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி’ என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.வி.எம்.பி.எழிலரசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது மத்திய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற பெயரில் ‘காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பாஜக அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் கரு பொருளாக ‘அகத்திய முனி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பாஜக தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சினை விதைக்கத் தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்திய இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம்; தேசிய உணர்வை வளர்கிறோம் என்ற பெயரில் தங்களின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பல்வேறு மாணவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு தற்போது ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ஆன்மிகத்தின் பெயரால் மாணவர்களிடையே சாதிய, மதவாத உணர்வுகளை விதைக்கும் வஞ்சக செயலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில், இங்குள்ள மத்திய பாஜக அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத் தனத்துக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து சமத்துவ சமுதாயத்தை நிறுவிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் தமிழகத்தில், கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் இத்தகைய சதி திட்டத்துக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜகவின் மதவாதப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, திமுக மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என சி.வி.எம்.பி. எழிலரசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: திருப்பரங்குன்றத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு துணைபோகிறது?

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை பின்பற்றும் தமிழ் மக்களிடம் தற்போது உருவாகியுள்ள குழப்பங்களும், பூசல்களும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வந்த வழிபாட்டில் திடீரென முரண்பாடுகள் தோன்ற இடமளித்திருப்பது வருத்தத்திற்குரிய கெடுநிகழ்வாகும்.

சதிகளை முறியடிப்போம் மதநல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் மதப்பூசல்களை உருவாக்க முனையும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு இனமானத் தமிழர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது. ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகக் காலங்காலமாக இம்மண்ணில் நீடித்து நிலைத்து வாழும் தமிழர்கள் நாம்; ஒற்றுமையே நம்முடைய பலமென்பதை உணர்ந்து நிற்க வேண்டும். நம்மிடையே நிலவும் மாசற்ற பேரன்பையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்க உணர்வையும் ஒருபோதும் இழக்காது, மதவாதச் சக்திகளின் சதிகளை முறியடிக்க ஓர்மையோடு களத்தில் நிற்க வேண்டியது பேரவசியமாகும்.

சமூக அமைதிக்கு எதிரானவை குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு இசுலாமியச் சொந்தங்கள் வரவேற்றுப் பதாகைகள் வைப்பதும், கோயிலுக்கு வருவோருக்கு நீராகாரம் அளித்து உபசரிப்பதும், தர்கா, தேவாலயங்களின் நிகழ்வுகளுக்கு மற்ற சமயத்தவர் சென்று வழிபாடு செய்வதும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கப்பாட்டுக்கான சான்றுகளாகும். அதனைக் குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்குவேட்டையாட முற்படும் மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவையாகும்.

பாஜகவை வளரவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு? பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இரு சமயத்தவரும் சிறுமுரணுக்கும் இடங்கொடாது வழிபாடும், தொழுகையும் நடத்தி வரும் நிலையில், இப்போது தேவையற்ற பதற்றம் எப்படி உருவானது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? மண்ணின் நலனுக்காக மக்களோடு இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு, நீதிமன்றத்தில் கடும் வாதங்களை வைத்து அனுமதியைப் பெறாவண்ணம் தடுக்கும் திமுக அரசு, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் ஒன்றுகூடலுக்கு மட்டும் வழியமைத்தது ஏன்? தொடக்க நிலையிலேயே, கூடுதல் கவனம் செலுத்தி, இரு தரப்பையும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால், இப்படியான பதற்றச்சூழல் உருவாகியிருக்குமா? சிக்கலைப் பெரிதாக்கி, பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

கனிமவள சூறையின் போது ஏன் வரவில்லை? ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என இன்றைக்குப் போராடுகிற பெருமக்களே! தமிழர் நிலமெங்கும் இருக்கும் குன்றுகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டித் தகர்த்து, கனிமவளங்களைச் சூறையாடும்போது எங்கே போனீர்கள்? அவற்றையெல்லாம. காக்க ஏன் வீதிக்கு வந்து போராடவில்லை? இம்மலை மீது வரும் பற்றும், பக்தியும் அந்த மலைகள் மீதும், குன்றுகள் மீதும் வராதது ஏன்? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நம் மண்ணில் உள்ள மலைகளை குடைந்து கனிம வளங்களை கடத்துவதை எதிர்த்து நாங்கள் போராடும்போது நீங்கள் எதுவும் பேசாது கடந்து சென்றது ஏன்? மலைகளை காக்க வேண்டும் என்ற எங்களின் உரிமைக்குரல் அப்போதெல்லாம் உங்கள் செவிகளில் விழாமல் போனது ஏன்?

சித்திரை, கள்ளழகர் விழாக்கள் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவுக்கும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் மதத்தைக் கடந்து ஒற்றுமையோடு கூடிக் குலவும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே நடந்தேறி வந்த வழிபாட்டை இவ்வளவு பெரிய முரணாக மாற்றி, சிக்கலாக உருவாக்கப்படுவதென்பது ஆளும் திமுக அரசின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. இருதரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒரு சார்பான பேச்சும், பிரச்சினை மேலும் சிக்கலாக வழிவகுத்தது. அதனையே தற்போது மதவாதச் சக்திகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாசல் திறந்து விட்டுள்ளது.
மொத்தத்தில், திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிறது திருக்குரான்! ‘உன் மதம் பெரிது வழிபடு! என் மதமும் பெரிது வழிவிடு’ என்பதுதான் காலங்காலமாக தமிழர் மண் கடைபிடித்து வரும் மாந்தநேயமிக்க சமயப்பொறையாகும்.

குன்றுகளும் சமயங்களும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு; அன்று தம் சீடர்க்கெல்லாம்,, அறிவுரை கூற எண்ணி,,, மன்றினை தொடங்கிய இயேசு பிரான் கல்வாரி குன்றின் மேல் ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே அருள்நெறி பொழிந்தார்; நபி பெருமானருக்கு ஹிரா மலையின் மீதே புனித குரான் அருளப்பட்டது; கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவர்த்தன மலை, சிவபெருமானுக்கு கயிலை மலை, பார்வதிக்கு பர்வதமலை என எல்லா சமயங்களும் இறைவனோடு இயற்கையை பொருத்தியே போற்றுகிறது. மதமோதல் நிகழாத தமிழகம் வழிபாடு என்பதே பேரன்பு வெளிச்சத்தின் வெளிப்பாடாகும்.
எனவே, வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி மதவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற முயல்பவர்களுக்கு தமிழர் மண்ணும், மக்களும் ஒருபோதும் இடமளித்திடக்கூடாது. இந்திய பெருநிலம் முழுவதும் மதக்கலவரங்கள் நிகழ்ந்து பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, நாடே நரகமான கொடும் நாட்களிலும்கூட தமிழர் நிலம் மட்டும் தம் பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியாலும், மானுட நேயத்தாலும் மதமோதல் நிகழாமல் அமைதி காத்து உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது. பேசித் தீர்ப்போம்.
ஆகவே, என் உயிர் தமிழ்ச்சொந்தங்கள் ஒரு மொழி பேசி, ஒரு மண்ணில் பிறந்து, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழும் நாம், நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சிக்கலையும் நாமே பேசி நமக்குள் தீர்த்துகொள்ள முடியும். இருபுறமும் உள்ள சமயப்பெரியவர்கள் அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்! திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள் அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை ஒற்றுமையுடன் உரத்துச்சொல்வோம்! தமிழர் நிலம் எந்த காலத்திலும் மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்! என சீமான் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி: புளிமூட்டையில் ஆரம்பித்து..! அரசியல் வரை..! அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி..!

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி என செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 2026 -ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என பேசி இருந்தார்.

இந்த பழனிசாமியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில், ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என பழனிசாமியை செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்திற்கு, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தி​யாளர்​களின் கேள்விக்கு பழனிசாமி பதிலளித்தார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி. இவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார் என பழனிசாமி பதிலளித்தார்.

இந்நிலையில், இந்த பழனிசாமியின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தமது எக்ஸ் பக்கத்தில், தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்..

பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்..

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்..

அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண் செந்தில் பாலாஜி எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.