Shehzad Poonawalla: “ராகுல் காந்தி பேசுவது சாத்தான் ‘கீதை’ ஓதுவது போன்றது..!”

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பாஜக அரசால் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளனர். காஷ்மீரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார். மேலும் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் இட ஒதுக்கீட்டை மேம்படுத்த முடியும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணி குறித்தும், ராகுல் காந்தியின் அரசியலமைப்பு பேச்சு குறித்தும் கடுமையாக விமர்சித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சேசாத் பூனாவாலா [Shehzad Poonawalla] வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி அரசியலமைப்பு குறித்துப் பேசுவது, சாத்தான் பகவத்கீதையையும், குரானையும் ஓதுவது போன்றது என்று சாடியுள்ளார்.

மேலும் அவரது எக்ஸ் பதிவில், ராகுல் உண்மையிலேயே அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அக்கறை கொண்டிருந்தால் காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி பற்றி விளக்கம் கொடுத்தாக வேண்டும். அதாவது, தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கைகளான, சட்டப்பிரிவு 370 வதை திரும்பக் கொண்டு வருவதையும், ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும் என சேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்: வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகன்

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்; “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி உருக்கம்: ‘அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை…’’

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமிக்குச் சென்ற ராகுல் காந்தி டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நினைவிடத்தை வலம் வந்தார். அவரோடு, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தனது தந்தையைப் பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் , “அவர் இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேப் டிரைவருடன் பயணித்து குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி..!

மக்கள் பணியே மகேசன் பணி” என பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த நெறியில் ராகுல் காந்தி அன்பு, நீதி மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய செய்திக்கு லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தங்கள் ஆதரவைக் காட்டிய யாத்ரா மாபெரும் வெற்றியை பெற்றவர். பொது வெளியில் நாடு மக்களுடன் சகஜமாக ராகுல் காந்தி பழகக்கூடியவர்.

அதன் வரிசையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், உபெர் பயணத்தின் போது சுனில் உபாத்யாய் உடன் கலந்துரையாடினேன். நாட்டில் உள்ள கேப் டிரைவர்கள் மற்றும் டெலிவரி ஏஜென்டுகள் போன்ற கிக் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.

கைக்குக் கிடைக்கும் வருமானத்தில் சேமிப்பு இல்லாமலும், குடும்பத்தின் எதிர்காலத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் அவர்கள் போராடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் உறுதியான கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் நீதியை நிலைநாட்டும்” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் 11 நிமிட வீடியோவில், சுனில் உபாத்யாய் என்ற அந்த டிரைவரின் காரில் ஏறிய ராகுல் காந்தி, கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகம் ஒன்றில் சுனில் உபாத்யாய் குடும்பத்தினருடன் சாப்பிட்டு கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டிய மாணவிகளுடன் கொண்டாட்டம்..!

நாட்டில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் தினம் நாடெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது. ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு நேற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவரது கையில் ராக்கிக் கயிறு கட்டினர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத் தில் கூறும்போது, ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷா பந்தன் நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது..!

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது, அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும்” என பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா..! ராகுல் காந்தி வாழ்த்து..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியின் அசாதாரண வாழ்க்கையை போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைஞர் கருணாநிதியின் சமூக முற்போக்கான தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்ட அசையாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது. அவரது தீர்க்கமான தலைமையின் கீழ் தான், தமிழகம் ஒரு துணிச்சல்மிகு லட்சிய மாற்றத்துக்கான பாதையில் இறங்கியது.

அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்துக்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை ஒரு முன்னோடியாக உறுதியாக நிலைநிறுத்த உதவியது மற்றும் பல மாநிலங்களை பெரிய கனவு காண தூண்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்ட விரும்புகிறேன். இந்தியாவை பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஸ்டாலின் கொண்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

Rahul Gandhi: “Happy Birthday, @thiruma ji..! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்..!

ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமாவளவன் ஜி! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்.

நமது நாட்டின் பன்மைத்துவ மற்றும் கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதற்கும், நமது மக்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றிய நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வில் தோற்றதால் மாணவர் தற்கொலை: மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்- நீட் விலக்கு அளிக்க வேண்டும்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது. முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசும், ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத திமுக அரசும் தான் மாணவனின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேறாத நிலையில், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். நீட் விலக்கு பெற்றே தீருவோம் என்று கூறி மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்கி வரும் திமுக அரசு, இனியாவது நீட் விலக்கு பெறுவதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக மாணவர்கள் விழிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் தோற்றால் வாழ்க்கையை இழந்து விட்டதால அர்த்தம் இல்லை. உயர்கல்வியில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத் விமர்சனம்: “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர்..விஷமி… !”

அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம்.

போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.

செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?

சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக கங்கனா ரனாவத் ராகுல் காந்தியை சாடியுள்ளார். இதுதொடர்பாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது.

நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.” என கடுமையாக சாடியுள்ளார்.