சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவில் மட்டும் 82 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து, கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
சீனாவிற்கு வெளியே ஹாங்காங், தாய்லாந்தில் தலா 8 பேரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மக்காவோ, சிங்கப்பூரில் தலா 5 பேரும், தென் கொரியா, மலேசியா, தைவான், ஜப்பானில் தலா 4 பேரும், பிரான்ஸில் 3 பேரும், இலங்கை, வியட்நாமில் தலா 2 பேரும், நேபாளம், ஜெர்மனி, கனடாவில் தலா 1 என மொத்தம் 16 நாடுகளில் தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தினமும் சென்னை வரும் விமானத்தில் பயணம் செய்பவர்களை கண்காணிக்க சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்காக குடியுரிமை சோதனைக்காக தனியாக 10 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்கேனிங் கருவி மூலமாக பயணிகளின் உடல் சூட்டை வைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதை கண்டுபிடித்து, அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கான தனி உடைகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 5 நாட்களாக சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதுவரை 15 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 10 சீனர்கள் உள்பட 68 பயணிகள் பொது இடங்களுக்கு செல்லாமல் அவர்களின் வீடுகளிலேயே தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.