மீண்டும் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை: “தமிழ் வாழ்க, தமிழ் வளர்க”என்ற பெயர்ப்பலகை


சென்னை மாநகராட்சியின் அலுவலக கட்டிடமான ரிப்பன் மாளிகையில், “தமிழ் வாழ்க, தமிழ் வளர்க”என்ற பெயர்ப்பலகைகள் இன்று நிறுவப்பட்டது. கடந்த கால ஆட்சியில் மக்கள் விரோத அரசு நீக்கிய இப்பெயர் பலகைகளை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளில் மீண்டும் நிறுவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்


கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி மற்றும் அரிசிபாளையம் பகுதியில் கோவிட் -19 தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி டோக்கன்களை வாங்கி வைத்து கொண்டு ஒரு சிலர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுப்பதும், மருத்துவரிடம் தகராறு செய்து கொண்டும் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி டோக்கன் விநியோகத்தில் குளறுபடி மக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர் மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தடுப்பூசி போடுவதற்கு குறைவான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சமரச பேச்சு நடத்தி கலைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், 40 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது.

இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையிரிடமும் திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தடுப்பூசிகளை தனியாருக்கும், கட்சியினருக்கும் பணத்திற்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கடந்த 8 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படுமா..!?

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.


இதில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அரசு அலுவலக கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற அலுவலக கட்டிடம் பல லட்சம் செலவில் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள காகாவாடி அருகே கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை அந்த கட்டிடம் திறக்கப்படாமல் அப்படியே பூட்டியே கிடக்கிறது.

உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் -19 காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் கோவிட் -19 தடுப்பூசி முகாமை தொடங்கி வைப்பு


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டுதல்படி, குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பணியை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூரில் முக்கிய காவல் அதிகாரிகள் இன்று பொறுப்பேற்பு


தேர்தல் அறிவிப்பில் தொடங்கி ஆட்சிமாற்றம் வரை அதிகாரிகள் மாற்றம் என்பது தமிழக அரசியலில் வழக்கமான நிகழும் ஒன்றாகும். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இப்படியிருக்க இன்று ஒரே நாளில் ஐஜி, டிஐஜி மற்றும் மாநகர் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர்.

இன்று காலை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தில் புதிய ஐ.ஜியாக சுதாகர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல கோயம்புத்தூர் சரக டிஐஜி ஆக முத்துச்சாமி பதவியேற்றார். கோயம்புத்தூர் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக முருகவேல் பொறுப் பேற்றுக்கொண்டார்.

ராகேஷ் டிக்கைட் திட்டவட்டம்: டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வருகின்றனர். கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு இந்த போராட்டத்தை டெல்லியில் இருந்து அரியானாவுக்கு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அரசு அதனுடைய சூழ்ச்சியில் வெற்றிபெற விடமாட்டோம். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்


மத்திய பிரதேசத்தில் கோவிட் -19 சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் சேர்ந்து, மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக கொடி கம்பத்தின் நிறத்தை மாற்றி கருணாநிதியின் உருவ படம் வைத்த மர்ம நபர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அதிமுக கொடிக் கம்பத்தின் நிறத்தை மாற்றிவிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அச்சிலை அருகே அதிமுக கொடி கம்பம் உள்ளது.

இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் பீடம் மற்றும் கொடி கம்பத்தின் நிறத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மாற்றியுள்ளனர். மேலும், கொடி கம்பத்தின் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அதிமுகவினர் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவலர் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.