கலைஞர் கருணாநிதி 98-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பணகுடி ரட்சண்ய சேனை ஆலய வளாகத்தில் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் வழங்கினார்.

மரம் இறக்குமதியாளர்கள் மற்றும் சா மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் முக கவசங்கள் வழங்கல்


தென்காசி மாவட்டம் செங்கோட்டை மரம் இறக்குமதியாளர்கள் மற்றும் சா மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட சுகாதார துறைக்கு முதற்கட்டமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் 50 ஆயிரம் முக கவசங்களை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்ததலின்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கோவிட் -19 தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளும், கலந்தாய்வு கூட்டங்களும் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினராக திருநங்கை நியமனம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினராக, பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, சிறந்த நடனக் கலைஞரான திருநங்கை நர்த்தகி நடராஜ் நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும்.

திருநங்கை ஒருவர் இத்தகைய உயரிய பொறுப்பேற்பது இதுவே முதன்முறை அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார். அனைத்துத் தரப்பினரின் கருத்துக்கும் செவி சாய்க்கும் அரசாகச் செயல்பட்டு, இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களுக்கெல்லாம், ஓர் முன்னுதாரணமாகத் தமிழ்நாடு அரசு திகழ்கின்றது.

‘சோனு சூட் ஸ்வாக் ஏர்ட்’ அமைப்பு சார்பில், அதிவிரைவு ஆக்சிஜன் மையம் துவக்கம்

கோயம்புத்தூர் மாவட்டம் ‘சோனு சூட் ஸ்வாக் ஏர்ட்’ அமைப்பு சார்பில், அதிவிரைவு ஆக்சிஜன் மைய துவக்க விழா நடந்தது. பப்பீஸ் குழுத்துடன் இணைந்து, ஒத்தக்கால் மண்டபம், வேதாந்தா அகாடமியில் நடந்த துவக்க விழாவில், ஆக்சிஜன் மையத்தை, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அப்பகுதியில் வசிக்கும், ஏழை மக்களுக்கு, வேதாந்தா அகாடமி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. அவசர தேவைக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், தமிழ்நாடு சோனு சூட் கோயம்புத்தூர் உதவி மையத்தை, 70699 99961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பகம் மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்


கோயம்புத்தூர் மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் கற்பகம் மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவர்கள் ஸ்டைபண்டு, உணவு, இருப்பிட வசதி நிர்வாகம் தரவில்லை என்று கூறி 150 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூரில் மின்தடை, மின்பழுது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

கோயம்புத்தூரில் மின்தடை, மின்பழுது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை கோயம்புத்தூர் மாநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கொ.குப்புராணி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ” கோயம்புத்தூர் மாநகர் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் சாதாரண நாட்களிலும், பருவ மழை காலங்களிலும் மின்தடை, மின்பழுது குறித்து புகார் தெரிவிக்க 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். புகைப்படத்துடன் கூடிய புகார்களை 9442111912 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

பச்சரிசியில் எலி புழுக்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரை அடுத்த கணேசபுரம் மாரியம்மன் கோவில் வீதியில், நியாய விலை கடை (எண்:104) செயல்படுகிறது. இங்கு, இரு நாட்களுக்கு முன் மூரண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்த மயில்வாகனன் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவை வாங்கினார். பச்சரிசியில் எலி புழுக்கை, புழுக்கள் இருந்துள்ளன.

கடை ஊழியரிடம் கேட்டபோது, ” மூட்டையில் என்ன வருகிறதோ, அதைத்தான் தர முடியும்,” என கூறியுள்ளார். இந்நிலையில் மயில்வாகனத்திற்கு மட்டுமல்ல அங்கு பொருள் வாங்கிய அனைவருக்கும் இதே போன்ற நிலைதான். இது சம்மதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவிட் -19 பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், திருநங்கைகள் பலர் உணவிற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கவுண்டம்பாளையம், நியூஸ்கியூம் காலனி, முருக்குகார லைன், பொங்கியம்மன் நகர், அசோக்நகர் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகே நடந்தது.


இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் கலந்து கொண்டு 85-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு தலா 10 கிலோ அரிசி, மைதா, ரவை, உப்பு, எண்ணெய், சோப்பு, மஞ்சள், மிளகாய் மற்றும் சாம்பர் தூள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி: பீட்சா, பர்கர், ஸ்மார்ட்போன், ஆடைகள் போன்றவற்றை வீடு தேடிச்சென்று கொடுக்கும்போது, ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று கொடுக்கக்கூடாதா?

டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனால், அத்திட்டத்தை கவர்னர் நேற்று முன்தினம் நிராகரித்தார். மத்திய அரசின் ஒப்புதலை பெறவில்லை என்றும், திட்டத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற தேவையில்லை. ஏதேனும் சர்ச்சை எழக்கூடாது என்பதால்தான், மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். அப்படி இருந்தும் டெல்லியில் இத்திட்டத்தை நிறுத்தியது ஏன்? ரேஷன் கடைகள், கோவிட் -19 யை பரப்பும் இடங்களாக மாறிவிடக்கூடாது.

ஆகவே, டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பீட்சா, பர்கர், ஸ்மார்ட்போன், ஆடைகள் போன்றவற்றை வீடு தேடிச்சென்று கொடுக்கும்போது, ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று கொடுக்கக்கூடாதா? இதனால், டெல்லியில் 72 லட்சம் பேர் பலன் அடைவார்கள். ரேஷன் மாபியாவையும் ஒழிக்க முடியும்.

மேற்கு வங்காளம், மராட்டியம், ஜார்கண்ட், டெல்லி என மாநில அரசுகளுடனும், விவசாயிகளுடனும், லட்சத்தீவு மக்களுடனும் மத்திய அரசு மோதி வருகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இப்படி இருந்தால், கோவிட் -19 யை எப்படி வீழ்த்த முடியும்? என கேள்வி எழுப்பினர்.