தேஜஸ்வி கல்லூரியில் கோவிட் -19 சிகிச்சை மையத்தை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பார்வை


கோயம்புத்தூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.


இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் சூலூர் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள தேஜஸ்வி கல்லூரியில் கோவிட் -19 சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.

நஞ்சுண்டாபுரம் பகுதியில் சுமார் 50 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி


கோயம்புத்தூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கோயம்புத்தூரில் கோவிட் -19 பாதிப்பு 22 சதவிகிதம் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையிலுள்ள 218 அர்ச்சகர்களுக்கு ரூ.4000 நிவாரண உதவி வழங்கல்


சென்னை – மயிலாப்பூரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை மாவட்டத்திற்க்கு உட்பட்ட 218 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு நிவாரண உதவிகள், ரூ.4000 இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின்,தமிழச்சி தங்கப்பாண்டியன், மற்றும் மயிலை த.வேலு ஆகியோர் வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப, துறை அதிகாரிகள் ற்றும் பகுதிச் செயலாளர்கள் ஏழுமலை, நந்தனம் மதி, முரளி, ஆகியோருடன் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் பலர் கோவிட் -19 னால் இறந்துள்ளனர்.

எனவே அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்க சுகாதாரப் பணியாளர்கள் கோயம்புத்தூர் மருதமலை சாலையில் உள்ள பி.என்.புதூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கே. சசிகலா: பெங்களூருவில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். அந்தவகையில் தேனியை சேர்ந்த கர்ணன் என்பவரிடம் நேற்று பேசுகையில், கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது. ரொம்ப மோசமான நிலைமைக்கு கட்சி போயிட்டு இருக்கு. அதை சரி பண்ணி கொண்டுவரணும்.

நான் இருக்கும் காலம் தொட்டு அதை நிச்சயம் செய்வேன். சொன்னபடி அவங்க ஜெயிச்சு காட்டுவாங்கன்னுதான் நான் ஒதுங்கியிருந்தேன். ஜெயிச்சியிருந்தா கூட அம்மா ஆட்சி 3-வது முறையாக வந்திடுச்சுனு சந்தோஷத்துலேயே நானும் இருந்துருப்பேன். அதை செய்யலையே. இப்போது என்கூட பேசுற தொண்டர்களையும் கட்சியை விட்டு நீக்கிட்டு இருக்காங்க. எனக்கு 4 வருட சிறைத்தண்டனை அப்படினு தீர்ப்பு வந்ததுமே, அடுத்த 10 நிமிஷத்துல அடுத்தக்கட்ட வேலையை ஆரம்பிச்சுட்டேன்.

உடனடியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, உடனடி முடிவு எடுத்து ஆட்சியை நல்லபடியா அமைச்சு கொடுத்துட்டுதானே போனேன். நான் பெங்களூருவில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு என வி.கே. சசிகலா தெரிவித்தார்.

விதியை மீறி செயல்பட்ட தனியார் நூற்பாலைக்கு சீல்

தமிழகத்தில் கோவிட் -19 பரவலை தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரை அடுத்த சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி நடுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை வைத்து இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோயம்புத்தூர் தொழிலாளர் நலத்துறை அதிகாரி தங்கதுரை, சூலூர் தாசில்தார் சகுந்தலாமணி, வருவாய் ஆய்வாளர் சிவபாலன், காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படுவதற்கு பதிலாக ஏராளமான தொழிலாளர்களை வைத்து இயக்கப்பட்டது தெரியவந்தது. எனவே கோவிட் -19 விதிமுறைகளை மீறி செயல்பட்ட தால் அந்த நூற்பாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தனியார் தொழிற்சாலைகளில் அரசு அறிவித்து உள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறையை மீறி செயல்பாட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கோவிட் -19 அல்லாத பிற நோய்களுக்கு பொதுமக்கள் வீடியோ கால் மூலம் சிகிச்சை

தமிழகம் முழுவதும் கோவிட் -19 குறைந்து வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கோவிட் -19 பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால், பிற உடல்நலபொதுப் பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.


இந்நிலையில் இந்த குறைபாட்டை தவிர்க்க, கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, டெலி மெடிசன் மூலம் சிகிச்சை பெற புதிய சிறப்பு செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியின் பயன்பாட்டை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது நகர்நல அதிகாரி ராஜா உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலியை செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று சிபிஇசிஒஆர்பி விஎம்இடி (CBECORP Vmed) என்ற டைப் செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் http://qrgo.page.link/sby6R என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பயன் படுத்தி 24 மணி நேரமும் வீடியோ கால் மூலம் மருத்துவர்களிடம் இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி: உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும்

மகாராஷ்டிர மாநிலம் மெல்காட் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தடுப்பூசி மீது சந்தேகம் அடைந்து அதை போட்டுக்கொள்ள தயங்கியுள்ளனர். இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் பழங்குடியின மக்கள் பேசும் மொழியான கோர்கு மொழியிலேயே தடுப்பூசி குறித்து எடுத்துரைத்துள்ளனர். இதையடுத்து, பழங்குடியின மக்கள் தங்கள் அச்சம் தவிர்த்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்தாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த செய்தியை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ மெல்காட் வனப்பகுதியில் நடந்த நிகழ்வு உள்ளூர் மொழியின் சக்தியையும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது” என்றார்.

சஞ்சய் ராவத்: ராகுல் காந்தி வார்த்தைகளில் வலு உள்ளது

பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் என அறிவித்தார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கோவிட் -19 கையாளும் முறை, தடுப்பூசி கொள்கையிலும் கடுமையாக விமர்சித்து இருந்தார். பொது மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போட்டு இருந்தால், 2-வது அலையால் நாடு இந்தநிலைக்கு மோசமாகி இருக்காது எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் விமர்சனங்கள், கருத்துகள் சரியாக உள்ளதா என்பது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் கேட்கப்பட்டது. இதற்கு, ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருந்து உள்ளன. சில அல்ல, அவரது பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அவர் கோவிட் -19 அல்லது தடுப்பூசி குறித்து பேசியவை உண்மையாகி உள்ளன. அவரது வார்த்தைகளில் வலு உள்ளது என சஞ்சய் ராவத் தெரிவித்தார் .