கல்லணையில் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நீர்வளத்துறை சார்பில் நீர்வள அமைப்புகள் விரிவாக்கம், புதுப்பித்தல் புனரமைத்தல் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ரூ.1036கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகள் ஆய்வு

மயிலாப்பூர் – பட்டினப்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகளை நேற்று ஊரக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மயிலை வேலு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் முரளி, வட்டச் செயலாளர்கள், குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் மா.மதிவாணன் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்து வழங்கல்


ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவாணன் அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயந்தி அவர்களிடம் வழங்கினார்.

ஒன்றிணைவோம் வா மூலம் சேலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ மு.க. ஸ்டாலின் வழங்கல்


சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் ஒன்றிணைவோம் வா மூலம் சேலத்தில் 11 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10,49,698 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 5,250 டன் அரிசி வழங்கும் திட்டத்தை 5 குடும்ப அட்டைத்தார்களுக்கு‌ உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கில்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் 11 சட்டமன்ற தொகுதியில் 23,797 மனுக்கள் பெறப்பட்டு, 1100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதில் 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

இந்திய யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கிய லட்சத்தீவும் ஒன்று. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக ப்ரபுல் ஹடா படேல் செயல்பட்டுவருகிறார். ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பர்புல் ஹடா படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்த விவகாரம் லட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆஷா சுல்தானா பங்கேற்றார்.

கேரளாவில் வசித்து வரும் ஆஷா சுல்தானா விவாதத்தின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக (Bio Weapon) மத்திய அரசு பயன்படுத்துகிறது. பர்புல் ஹடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆஷா சுல்தானா மீது லட்சத்தீவு காவல்துறை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் தனது மகன் சுப்ரன்ஷு ராயுடன் இணைந்தார்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த முகுல் ராய்க்கும், மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டும் அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

மேற்கு வங்க பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார். இதையடுத்து, முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று தனது மகன் சுப்ரன்ஷு ராயுடன் இணைந்துள்ளார்.

ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில்: “இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்..?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில்,”ஜிஎஸ்டி வரிமுறை நொறுங்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ” இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தியாவை பா.ஜனதா கொள்ளையடிக்கிறது” என்ற ஹேஷ்டேக்கில் பதிவை பிரியங்கா வெளியீடு

நாடு முழுவதும் கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் மூலமாக மத்திய அரசு ரூ.2.74 லட்சம் கோடி வரி வசூல் ஈட்டியிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று கடுமையாக சாடியிருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இந்த பணம் மூலம் என்னவெல்லாம் செய்திருக்க முடியும் தெரியுமா? மொத்த நாட்டுக்கும் தடுப்பூசி 718 மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 29 மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, 25 கோடி ஏழை மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் போன்றவற்றை செய்திருக்கலாம். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியிருந்தார். ‘இந்தியாவை பா.ஜனதா கொள்ளையடிக்கிறது’ என்ற ஹேஷ்டேக்கில் இந்த பதிவை பிரியங்கா வெளியிட்டு இருந்தார்.

டி.கே. சிவக்குமார்: பா.ஜ.க. பிக்-பாக்கெட்டில் ஈடுபடுகிறது

நாட்டில் மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 2021ம் ஆண்டில் பெட்ரோல் விலையை பா.ஜ.க. 48 முறை உயர்த்தியுள்ளது. நடுத்தர வருவாய் ஈட்டும் மக்கள் எத்தனை முறை சம்பள உயர்வு பெற்றுள்ளனர்? குறைந்தபட்ச ஊதியம் எத்தனை முறை உயர்த்தப்பட்டு உள்ளது? தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் எத்தனை முறை ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது? விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை எத்தனை முறை அதிகரிக்கப்பட்டு உள்ளது?

இது பா.ஜ.க.வின் பகல் கொள்ளை என கூறியுள்ளார். பெட்ரோல் வரி என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் பா.ஜ.க. பிக்-பாக்கெட்டில் ஈடுபடுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் வழியே வரியாக பா.ஜ.க. ரூ.20.60 லட்சம் கோடி சேகரித்து உள்ளது என்றும் கூறியுள்ளார். இப்படியே போனால், வரும் 2024ம் ஆண்டுக்குள் பெட்ரோல் ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.