அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 360 பேர், பயிற்சி மருத்துவர்கள் 150 பேர் உள்ளனர். தங்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, மருத்துவமனை வளாகத்தில், கருப்பு பேட்ஜ் அணிந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கூறுகையில், ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை குறைவாக வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., முடித்து பணியில் சேரும் டாக்டர்களுக்கு, ரூ.80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், எம்.பி.பி.எஸ்., முடித்து மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, குறைவான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கவேண்டும் என கோரிக்கை வைதது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை


திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் “மக்கள் இயக்கம்” இலக்குக்கு வலுசேர்க்கும் வகையில் Ascot Group &Capital land சார்பில் ரூ. 20 லட்ச ருபாய் மதிப்பீட்டில் வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு வழங்கினர்.

எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய கூடாது:பெட்ரோல்-டீசல் விலையைமத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவிட் -19 தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் மே 24-ந்தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் வருகிற 21-ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வின்படி 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசுஅனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் கோவிட் -19 காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாரதீய ஜனதா கட்சி அறிவித்திருந்தது. அதன்படி உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலை, நேருவீதி, ஐஸ்வர்யாநகர், காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று பா. ஜனதா கட்சியினர் தங்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜனதா அரசு சிவசேனாவை அடிமைகளை போலவே நடத்தினர்

மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.இந்நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு பயணம் செய்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார்.

இதனால் மீண்டும் இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜல்கானில் சிவசேனா கட்சி தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், முந்தைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசில் சிவசேனாவுக்கு இரண்டாம் நிலை அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டது. சிவசேனா அடிமைகளை போலவே நடத்தப்பட்டது.

மேலும் சிவசேனா ஆதரவு மூலமாக கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியை அழித்தொழிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.சிவசேனா மகாராஷ்டிராவில் அதன் முதலமைச்சரை கொண்டு செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பேன். சிவசேனா தொண்டர்களுக்கு இதனால் எதும் கிடைக்காவிட்டாலும், மாநிலத்தின் தலைமை தற்போது சிவசேனாவின் வசம் உள்ளது என்று பெருமையுடன் சொல்ல முடியும். மாகவிகாஸ் கூட்டணி இந்த உணர்வோடு தான் 2019-ம் ஆண்டு நவம்பரில் உருவாக்கப்பட்டது.

மே 2-ந் தேதி 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 21 தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, விடுதலை கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர் இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், கோவிட் -19 கோரப்பிடியில் சிக்கி உள்ள மக்களுக்கு உதவ வேண்டிய இடத்தில் உள்ள மத்திய அரசு, அதை செய்யாமல், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. மே 2-ந் தேதி 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 21 தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தொடர் விளைவாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. மொத்தவிலை குறியீட்டு எண் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆகவே, உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் உணவு பொருட்களின் விலை 5 சதவீதமும், அத்தியாவசிய பொருட்கள் விலை 10.16 சதவீதமும் அதிகரித்துள்ளது. இப்பொருட்கள் சில்லரை சந்தையை அடையும்போது, இன்னும் விலை கூடி விடுகிறது.பொருளாதார மந்தநிலையும், வேலையில்லா திண்டாட்டமும், பட்டினியும் நிலவும்போது இப்படி நடக்கிறது. பேராசை பிடித்தவர்கள், கள்ளச்சந்தையில் அத்தியாவசிய மருந்துகளை விற்கிறார்கள். அவர்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இனி பெண் காவல்துறையினர், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிக்கு சாலைகளில் கால்கடுக்க நின்று அவதிப்பட வேண்டியதில்லை.

முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, சாலைகளில் 50 அடிக்கு ஒருவர் வீதம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதுபோன்ற பாதுகாப்பு பணியில் பெண் காவல்துறையும் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவல்துறையினர் சில சமயம் பலமணி நேரம் சாலைகளில் கால்கடுக்க நிற்கவேண்டியது வரும். அது போன்ற சமயங்களில் இயற்கை உபாதையால் பெண் காவல்துறையினர் அவதிப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில் இது போன்ற இன்னல்களில் இருந்து விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணையோடு பெண் காவல்துறையினருக்கு உதவி புரிந்துள்ளார். நான் செல்லும் சாலைகளில் பெண் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம், என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவுறுத்தல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆட்சியர் இன்று திடீர் மாற்றம்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்தவர் ராஜாமணி. இவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு, பதிலாக புதிய ஆட்சியராக எஸ்,நாகராஜன் நியமிக்கபட்டு பொறுப்பேற்றார். இவர் தற்போது நில நிர்வாக துறை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார் . இவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமிக்கபட்டுள்ளார்.

வெடித்தது சர்ச்சை: குஜராத்தி பாடகருக்கு வீட்டிலேயே கோவிட் -19 தடுப்பூசி…!?

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இந்தியா வந்திருந்தபோதும் ஆமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கீதா ரபாரியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாதாபார் கிராமத்தில் பாடகர் கீதா ரபாரியின் வீடு உள்ளது.

இந்த வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒரு படத்தை சமூக ஊடகத்தில் கீதா ரபாரி பகிர்ந்தார். பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொள்வோர் ஆன்லைனில் பதிவு செய்தபிறகு, குறிப்பிட்ட மையத்துக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் கீதா ரபாரி கடந்த சனிக்கிழமையன்று ஆன்லைனில் பதிவு செய்தபோதும், வீட்டிலேயே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கீதா ரபாரி பிரபலமானவர் என்பதால் அவருக்கு இந்த சலுகையா என்ற சர்ச்சை வெடித்தது. அவர் மீது மாவட்ட நிர்வாகத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்த இதுதொடர்பான படத்தை கீதா ரபாரி நீக்கிவிட்டார்.