பெண் ஆட்சியர் அதிரடி: அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி புதியதாக பொறுப்பேற்று ஆட்சியர் ஸ்ரேயா சிங் 3-வது பெண் ஆட்சியர் ஆவார். ஸ்ரேயா சிங் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்வரிசையில் நேற்று கொல்லிமலைக்கு ஆய்வு கொண்டு, அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய அனுமதியின்றி மண் ஏற்றி வருவதை அறிந்த அவர் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

கோவிட் -19 நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பு

கோயம்புத்தூர் ஹோப்காலேஜ் லட்சுமி புரத்தைச் சேர்ந்த ருக்மணி சித்ரா பகுதியில் உள்ள கண் மருத்துவமனை குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்ப அட்டை மூலம் முதலமைச்சர் அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக காந்தி வீதியில் உள்ள சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலை கடை எண் 91-க்கு சென்று கடந்த 16-ந் தேதி டோக்கன் பெற்றுள்ளார்.

பின்னர் கடைக்கு சென்று பணம் மற்றும் பொருட்களை கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர் மறுநாள் வருமாறு தெரிவித்துள்ளார். மறுநாளும் சென்றுள்ளார். இவ்வாறு 4 தினங்களாக கொடுக்காமல் கடை ஊழியர் இழுத்தடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு மூலம், ருக்மணி கூட்டுறவு பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

1 கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் பெண் கைது

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஷ்வரி மற்றும் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அந்தப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு 1 கிலோ 350 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்துறைக்கு முத்துலட்சுமியை கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் ரூ.71 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடந்த வழிகாட்டுதல் வகுப்பு

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் உதவி மையத்திற்கு நியமிக்கப்பட்ட பெண் காவல்துறையினர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடந்த வழிகாட்டுதல் வகுப்பின் தொடக்க நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி. சீமா அகர்வால் காணொலி வாயிலாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை உள்பட 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வந்த ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி போடுவதற்கு காத்திருந்தனர்.

அப்போது ஆசிரியர்கள் இல்லாத நபர்களை வரிசையில் நிற்க வைக்காமல், உள்ளே அனுமதித்து தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வடகொரியா அறிக்கை: நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு


வடகொரியா, தங்கள் நாட்டில் கடந்த 10-ந் தேதி வரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 2 பஞ்சாயத்துகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 485 பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

திரிபுரா மாநிலத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான 2 நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், வடக்கு திரிபுரா மாவட்டம் மங்கள்காலி கிராம பஞ்சாயத்திலும், செபாகிஜலா மாவட்டம் பூர்ண சண்டிகார் கிராம பஞ்சாயத்திலும் தகுதியுள்ள அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டதாக முதலமைச்சர் பிப்லப்குமார் தேவ் தெரிவித்தார். அந்த 2 பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 485 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சம்பித் பத்ரா: ராகுல் குழப்பத்தில் இருக்கிறார்

கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக ராகுல் காந்தி, நேற்று கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், நேற்றையில் இருந்தே நாங்கள் இதைப்பற்றி அஞ்சி வந்தோம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடம் புரளச்செய்வதற்காக காங்கிரசும், ராகுலும் எதையாவது செய்கிறார்கள். நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கிறபோதெல்லாம் ராகுல் காந்தியும், காங்கிரசும் அந்த முயற்சிகளை தடம்புரளச் செய்யும் விதத்தில் அரசியல் செய்கிறார்கள்.

உள்ளபடியே எங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் உண்மையாகவே ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்கிறது. ராகுல் குழப்பத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முரண்பாடான கோரிக்கைகளை முன்வைக்கிறது என தெரிவித்தார்.

ராகுல் காந்தி: “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதே எனது நோக்கம்”

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூடி நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உ.பி. சட்டசபை தேர்தல், அடுத்த நாடாளுமன்ற தேர்தல், 3-வது அணி அமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே கொரோனா தொற்று பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தியிடம், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பற்றி நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். ஆனால் அவற்றுக்கு பதில் அளிப்பதை ராகுல் காந்தி தவிர்த்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதுதான் எனது நோக்கம்.

நாங்கள் நினைக்கும் திசையில் அரசு செயல்படவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம். எனவே இதில் இருந்து உங்களை அல்லது என்னை திசை திருப்ப மாட்டேன். அரசியலில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இங்கும், அங்கும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி விவாதிக்க ஒரு நேரம், இடம் உள்ளது என தெரிவித்தார்.

சரத்பவார் வீட்டில் 8 கட்சிகள் ஆலோசனை

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சரத்பவார் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை அணி திரட்டி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் சமீபத்தில் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நேற்று சரத்பவார் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், பரூக் அப்துல்லா, யஷ்வந்த் சின்கா, கான்ஷ்யாம் திவாரி, , நிலோத்பல் பாசு, ஜெயந்த் சவுத்ரி, சுசில் குப்தா மற்றும் பினாய் விஸ்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.