வி.கே. சசிகலா: அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார்.

அதில், கட்சியின் மீது அதீத பற்றுக் கொண்டிருக்கும் தொண்டர்கள் இருக்கும்வரை, அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது. இது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி. நிச்சயம் தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்தக் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி, அம்மா நினைத்தது போல நல்லபடியாக பெயர் வாங்கிக் கொடுப்போம். நிச்சயம் அதைச் செய்வேன். கட்சியை மீட்டெடுத்து நல்லாட்சி தருவேன் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: தந்தை ஸ்டான் லூர்துசாமிக்கு தாழ்மையான அஞ்சலி

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் சேவை செய்து மனித உரிமைகளின் குரலாக மாறிய ஒருவர், இறந்த நேரத்தில் கூட அவருக்கு நீதி மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு மாநிலமானது தனது திட்டங்களுக்கு மற்றொரு மாநிலத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது. ஆகவே, கர்நாடக முதல் மந்திரி , தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது அரசியல் விருப்பமின்மை” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,மேகதாது திட்டத்திற்கான டெண்டர்கள் விடும் பணிகளை தொடங்கினோம் என்று தெரிவித்த சிவக்குமார், “ஏன் அதே செயல்முறையைத் தொடரவும், டெண்டர்களை வழங்கவும் முடியவில்லை?” எனவும் கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

ப.சிதம்பரம்: ரபேல் விவகாரம் அலமாரியில் இருந்து ‘நிகழ்வுகள்’ மற்றும் ‘உண்மைகள்’ ஒவ்வொன்றாக ஏன் வெளியேறவேண்டும்?

ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரபேல் விவகாரத்தில் 25-3-2015, 26-3-2015, 8-4-2015, 10-4-2015, 9-11-2015, ஜனவரி 2016, செப்டம்பர் 2016, 28-11-2016 ஆகிய புதிய தேதிகள் வெளிவந்துள்ளன. கண்டிப்பாக பிரதமர், பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை மந்திரி இந்த தேதிகளில் என்ன நிகழ்வுகள் நடந்தது என்பதை கூறவேண்டும்.


எந்த மர்மமும் இல்லை என்றால், முழு விவகாரத்தையும் ஒரே அமர்வில் வெளிப்படையாக ஏன் சொல்லக்கூடாது? அலமாரியில் இருந்து ‘நிகழ்வுகள்’ மற்றும் ‘உண்மைகள்’ ஒவ்வொன்றாக ஏன் வெளியேறவேண்டும்?

மரத்தின் கிளைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெரப்பஞ்சோலை மற்றும் பெரியகோம்பை ஊராட்சிகள் அமைந்துள்ளது. இங்கு செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


இதனால் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க சீராக செல்போன் சிக்னல் கிடைக்கும் மரங்களில் ஏறியும், வீட்டு மொட்டை மாடிகள் மற்றும் மலை குன்றுகளுக்கு ஏறிச்சென்றும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருகின்றனர்.

ஔவையார் வேடத்தில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியை

 


புதுக்கோட்டை மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை யுனைஸ்ரீ கிறிஸ்டி ஜோதி என்பவர் பள்ளியில் மாணவர் சேர்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஔவையார் வேடம் அணிந்து வண்டிபேட்டை பகுதியில் பாட்டுப்பாடி, நெல்லிகனிகளை அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு வழங்கி பள்ளியில் சேர வலியுறுத்தினார்.

பழங்குடியின நல ஆர்வலர் ஸ்டான் லூர்துசாமி காலமானார்

தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான பாதிரியார் ஸ்டான் லூர்துசாமி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்தார். 84 வயதான இவர், மகாராஷ்டிரா பீமா- கோரேகாவ் வன்முறை தொடர்பான எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டில் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், இவருக்கான ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பார்கின்சன் நோய் பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இடையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் உயிரிழந்தார். இத்தகவலை அவரது வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்தனர்.

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்டு, ஸ்டேன் சுவாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில், அவர் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் காவல்துறை தலித் குடும்பங்களை தாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரவுனாபரின் அசாம்கார் பாலியா கிராமத்தில் தலித் குடும்பங்களை உத்தரப் பிரதேசம் காவல்துறை தாக்கிய செய்தி உள்ளது. அங்கு பல வீடுகள் இடிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இது அரசு ஊழியர்களின் தலித் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லும் 109 டி என்ற புதிய வழித்தட பேருந்து சேவை

சென்னை திருவொற்றியூர் புதிய பேருந்து பணிமனையில், திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லும் 109 டி என்ற புதிய வழித்தட பேருந்து சேவையின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி விழாவில் பங்கேற்று புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான புதிய வழித்தடத்தில் ரூ.47 கட்டணத்தில் இப்பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்து காசிமேடு பகுதிக்குள் நுழைந்தபோது அங்கு திரளாக கூடியிருந்த மீனவர்கள் மலர்தூவி, தீபாராதனை காண்பித்து வரவேற்றனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வி.கே. சசிகலா: எல்லா தொண்டர்களுக்கும் கட்சியில் உரிமை உண்டு

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார்.

அதில் தொண்டர்கள் கவலைப்படவே வேண்டாம். நிச்சயம் நான் வருவேன். கட்சியை நல்லபடியாக வழிநடத்துவேன். ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து பகுதிகளிலும் உள்ள தொண்டர்களைச் சந்திப்பேன்.

தொண்டர்கள் மனசுபடி நான் நிச்சயம் செய்வேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இது தொண்டர்களின் கட்சி. இப்போது ஒரு சிலர் தவறான போக்கை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறு. எல்லா தொண்டர்களுக்கும் கட்சியில் உரிமை உண்டு.

யாரும் மனதை விட்டவிட வேண்டாம். கட்சியில் பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை என்று எல்லாருமே சொல்கிறார்கள். எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம். எல்லாவற்றையும் சரி பண்ணிடலாம். நான் இருக்கேன் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.