அரசு பணத்தை சொந்த கணக்கில் செலுத்திய முத்திரைத்தாள் தனி தாசில்தார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்திரைத்தாள் தீர்வை தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான முத்திரைத்தாள் தனி தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், தேனி மாவட்டத்துக்கான தனி தாசில்தாராக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் தேனி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கான முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார், அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அரசின் கணக்கில் செலுத்தாமல், தனக்கு சொந்தமான வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் செந்தில்குமார் செய்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 710 வழக்குகளுக்கு தீர்வு

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள், வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 710 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மூலம், ரூ.11 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 588-க்கு தீர்வு ஏற்பட்டன. தீர்வு காணப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டன.

பா.ஜனதா தீர்மானம் கோயம்புத்தூரை தலைநகரமாக கொண்டு கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகர பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பஜனை கோவில் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களையும் இணைத்து  கொங்குநாடு என்கிற புதிய மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும் கோவையை தலைநகராக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நிர்வாக ரீதியாக, கோயம்புத்தூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய இடர்பாடுகள் குறையும்.

தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ, கொங்கு மண்டலத்தை அறிவிக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கொங்கு மண்டலத்தில் எளிதாக கிடைப்பதால் சென்னையை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை   வராது. சாலை வசதி, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் சிறப்பான முறையில் இருக்கிறது.

இதனால் தலைநகர் டெல்லி மற்றும், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பிற மாநில தலைநகரங்களுக்கு, விமானம் மூலம் நேரடியாக சென்று வரும் வாய்ப்பும், கோயம்புத்தூரில் இயல்பாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலம், “கொங்குநாடு” என்கிற பெயருடன் தனி மாநில அந்தஸ்துடன் உருவானால், இனி வரும் காலங்களில் இந்த மண்டலத்தின் வளர்ச்சி தனிச்சிறப்பு உடையதாக இருக்கும். எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியம்

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. கொரோனா பரவத்தொடங்கி 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையாமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது.

அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது. தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து தற்காலிக சுகாதார ஊழியர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த யாருக்கேனும் அறிகுறிகள் உள்ளதா, தடுப்பூசி போட்டு உள்ளனரா என்று வீடு, வீடாக கணக்கெடுக்க எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டப்படிப்பு வரை முடித்த மொத்தம் 250 பேர் தற்காலிக சுகாதார ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடையாள அட்டை, தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 9-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை என ஒரு மாதம் பணிபுரிந்தனர்.

ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்துக்கு தற்காலிக சுகாதார ஊழியர்கள் வந்தனர். பின்னர் ஒப்பந்ததாரரிடம் சம்பளம் இன்னும் வழங்கவில்லை. எப்போது வழங்கப்படும் என்று அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்காததால், ஒப்பந்ததாரரை தற்காலிக சுகாதார ஊழியர்கள் சிறைபிடித்தனர். அவர் காரில் ஏறி செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிதி நிறுவனத்தின் சார்பில் கடன் தருவதாக கூறி மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் மனு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அண்ணா புதுகாலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆராயி. என்பவர் தனது மகனுடன் வந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், தான் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.1 லட்சம் அனுப்புமாறும் கேட்டு கொண்டார். இதை உண்மை என்று நம்பி நான், எனது மகன் திருமலையின் கூகுள் பே செயலி மூலம், மர்மநபர் அளித்த செல்போன் எண்ணிற்கு அன்றைய தினமே அக்கம்பக்கம் கடன் வாங்கி ரூ.5 ஆயிரம் அனுப்பினேன்.

பின்னர் கடந்த 5-ந் தேதி அன்று ரூ.30 ஆயிரமும், 7-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்து 500-ம் என மொத்தம் ரூ.73 ஆயிரத்து 500 அனுப்பினேன். அதன்பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு போதிய படிப்பறிவு இல்லாததால் ரூ.5 லட்சம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டனர். எனவே, என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும் மனுவில் என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்களில் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்டதா? செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துகின்றனவா? என்றும் கொரோனா சம்பந்தமான வழிகாட்டு முறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என 129 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் 2½ கிலோ, காளான் 2 கிலோ, காலாவதியான, சமைத்த உணவுப் பொருட்கள் 13 கிலோ, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 3½ கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அந்த ஓட்டல்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் சுத்தம் இல்லாத உணவு தயாரித்து விற்பனை செய்த 2 கடைகளுக்கு முன்னேற்ற அறிவிப்பு நோட்டீசு வழங்கப்பட்டது. 7 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது.

பழைய காகிதங்களில் சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்த 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. துரித உணவு தயார் செய்பவர்கள் தினமும் சமையல் எண்ணையை மாற்றிக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து கடைகளிலும் உரிமம், பதிவு சான்று பெறப்பட்டுள்ளதா? மற்றும் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்றும் புதுப்பிக்காத கடைகளை உரிய நேரத்தில் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு 34 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

உணவு வணிகர்கள் அனைவரும் முக கவசம், தலைக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவு சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நிதி மய்யம் போராட்டம்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் நிதி மய்யம் மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று  தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது.



ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவும்? அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா வைரஸின் 2ம் அலை பாதிப்பு தணிந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தமிழ் நாடு – கேரள எல்லையான செறுவாரக்கோணத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஜூன் 7ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், ஜூன் 28ம் தேதி அவருக்கு ஜிகா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்டன. மொத்தம் 1 9 பேருக்கு அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர்களது சளி, ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண் உட்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவுகிறது. அதிகாலை, பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இந்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் என்றும், இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலை பரப்பும் தன்மை கொண்டவை எனவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், கருவும் பாதிக்கப்படும் என்றும், இதனால் கருச்சிதைவு மற்றும் குறை பிரசவம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் தென்படும் எனவும் கூறியுள்ளனர்.

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல்,தலைவலி, தோலில் நமைச்சல், மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்க்கென பிரத்யேக சிகிச்சை, தடுப்பூசிகள் இல்லை என தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு தென்சென்னை சார்பாக ப ழங்குடியின நல ஆர்வலர் ஸ்டான் லூர்துசாமி மறைவிற்கு இரங்கல்

சென்னை சைதாபேட்டையில், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு தென்சென்னை சார்பாக ப ழங்குடியின நல ஆர்வலர் ஸ்டான் லூர்துசாமி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிக்காதே! CAA,NPR, NRC யை – கைவிடு காஷ்மீரின் பறிக்கப்பட்ட 370 வது பிரிவை திரும்ப வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், ராமகிருஷ்ணன், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .