Annamalai: கமலஹாசனுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை அவசியம்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, முகப்பேர் கலெக்டர் நகர் சிக்னல் அருகே கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM machine) ஒரே வேட்பாளர், ஒரே பட்டன் தான் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தேசியக் கொடியின் மூவர்ணத்தை மாற்றி காவி நிறத்தை மட்டுமே நிறுவுவதுதான் பாஜகவின் நோக்கம் என்றும் சாடினார். திராவிட மாடல் என்பது நாடு தழுவியது எனவும் கமல்ஹாசன் கூறினார்.

இதேபோல வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கட்சி தொடங்கிய நாளில் இருந்து வடசென்னைக்கு அதிக முறை வந்து செல்பவன் நான்.

என்னை போன்ற பலரின் கோரிக்கைக்கு இணங்க ரூ.1000 கோடி வடசென்னை வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. குடிசை மாற்று வாரியம் என்னும் வார்த்தையை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. குடிசையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து 40 ஆண்டுகளாகின்றன. அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மத்தியிலோ வெளிநாடுகளில் இருந்து யாரேனும் வந்தால் குடிசை மறைப்பு வாரியம் என்பது போல் குடிசையை திரை போட்டு மறைத்து விடுகின்றனர்.

அந்த ஏழ்மை அவர்களால் வந்ததுதானே. இங்கு இருப்பதைபோல பெண்களுக்கு உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவை எத்தனை மாநிலங்களில் வழங்கப்படுகிறது என பார்க்க வேண்டும். குஜராத் மாடலில் இதெல்லாம் வழங்கப்படவில்லை. அவர்கள் 2050-ல் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கை, தமிழகம் இப்போதே அடைந்துவிட்டது. ஊழல் என பேசுபவர்கள் தேர்தல் பத்திரம் என்னும் உலக மகா ஊழலை சட்டத்தை வளைத்து செய்திருக்கின்றனர். 10 ஆண்டுகாலம் நடந்த ஆட்சி டிரெய்லர்தான்.

மெயின் படம் போட காத்துக் கொண்டிருக்கின்றனர். உணவு, உடை உள்ளிட்டவற்றை அவர்கள் முடிவு செய்வார்கள். அது நடக்கக் கூடாது. இது மக்களுடன் ஒன்றாத அரசு என கமல்ஹாசன் பேசினார்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிரச்சாரத்தில் மத்திய அரசு நாக்பூரை தேசிய தலைநகரமாக மாற்ற திட்டமிட்டு வருவதாகவும் அதனால், பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் பேசி இருந்தார். இந்த விஷயம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை குப்புசாமி, “அவரை மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு போயி மூளையை சோதனை செய்யணும்.. அது கமல்ஹாசனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு மூளை சோதனை செய்யப்படவேண்டும்… உண்மையில், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா? சரியாக சாப்பிடுகிறார்களா? சுய நினைவோடுதான் இருக்கிறார்களா? அவர்களுக்கு இருக்கும் இரண்டு மூளைகளும் வேலை பார்க்கிறதா?? என மருத்துவ ஆலோசனை அவருக்கு கொடுக்கணும்..

நல்ல உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்..” என சீறினார். தொடர்ந்து பேசிய அவர், நாக்பூரை எப்படி இந்தியாவின் தலைநகராக மாற்றமுடியும் ?? என பதிலுக்கு கேள்வியைக் கேட்டார்.. மேலும், இந்தியாவின் ஒரு தலைநகராக சென்னையை கொண்டுவாருங்கள்.. தென் மாநிலத்திற்கு கொண்டுவாருங்கள் என்றால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன்..

கமல்ஹாசன், எங்கேயே இருந்துட்டு, நாக்பூரில் RRS அலுவலகம் இருக்கிறது.. அதனால், நாகபூரை தலை நகராக மாற்றிவிடுவார்கள் என பேசுகிறார். அதனால், கமலுக்கு கண்டிப்பாக மூளை பரிசோதனை வேண்டும்.. உண்மையில், சுயநினைவோடுதான் பேசுறாரா ?

ஆரோக்கியமான கருத்துக்களை பேசுகிறாரா? அல்லது, திமுகவிக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ஜிய சபா சீட்டிற்காக விற்றதனால் இப்படி கூவவேண்டுமே என நினைக்கிறாரா?? என்பதனை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என அண்ணாமலை குப்புசாமி பேசினார்.