ஆர்.பி.உதயகுமார்: அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்..!

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் அரசியல் களத்தில் அது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த விழாவை மையமாக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அண்மையில் விமர்சித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், பழனிசாமி குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ரெட் ஜெயன்ட், ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் மீது நடந்த சோதனைகள், மணல் கடத்தல் விசாரணை, 2019 மக்களவை தேர்தலின்போது வேலூர் தொகுதியில் பிடிபட்ட பணம், திருவண்ணாமாலையில் ஆளுங்கட்சியினரின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் பற்றிய விசாரணைகள் திடீரென்று பாதியில் நின்ற மர்மம் என்ன, அண்ணாமலை ரிலீஸ் செய்த திமுக பைல்ஸ் என்னவாயிற்று?

மக்களவைத் தேர்தல் 2019-ல் நடைபெற்றபோது, பிரதமர் மோடி, வேட்புமனு தாக்கல் செய்ய, பழனிசாமியை அழைத்ததாகவும், பழனிசாமி வர மறுத்ததாகவும், இதனால் அண்ணாமலை கூட்டணி கட்சித் தலைவராக பழனிசாமியை ஏற்கவில்லை என்றும் அண்ணாமலை பொய்யான தகவலை கூறியுள்ளார். இவர் பாஜக தலைவரானதே 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, பழனிசாமியின் பின்னே கைகூப்பி நின்றதும், அரவக்குறிச்சி தொகுதியில் பிரதமர் மோடியின் பெயரை சுவர் விளம்பரங்களில் அழித்ததும், சமூக ஊடகங்களில் உள்ளன. 2022-ஆம் ஆண்டு அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசும்போது, “பழனிசாமியின் ஆட்சி பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியும், அப்படி ஒரு மனிதர் முதலமைச்சராகவும் இல்லையே. அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது பாஜகவுக்கு பெருமை, எனக்கும் பெருமை” என்று பேசினார். அந்த வீடியோ பதிவுகளை அண்ணாமலை பார்க்க வேண்டும்.

பழனிசாமி பற்றி கடந்த சில ஆண்டுகளாக திமுகவினர் பேசுவதை, அவர்களின் புது கொள்கை கூட்டணி அண்ணாமலை பேசுகிறார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு 4-வது இடம்கூட கிடைக்காது என்று அண்ணாமலை சாபமிடுகிறார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த இயக்கம் வேறு ஒருவர் கைக்குப் போய்விடும் என்று ஆரூடம் சொன்னவர்தான் அண்ணாமலை. 2026 தேர்தலில் அதிமுகவின் தகுதியை மக்கள் தீர்மானிப்பார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.