மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையில் தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை கண்டிப்பவர்களுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தை கொல்கத்தா மாநில பாஜக தீவிரமாக கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது. மருத்துவர் பாலியல் கொலை ஆளுங்கட்சியின் மெத்தன போக்கை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதில் மத்திய அமைச்சரும் பாஜக மேற்கு வங்க மாநிலத் தலைவருமான சுகந்த மஜூம்தார் கலந்து கொண்டார். அப்போது அவர் முன்வைத்த கருத்து அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகந்த மஜூம்தார், “கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்த வேண்டும்.
முக்கியமாக மம்தா பானர்ஜியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடமும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாஜக மகளிரணி, இந்த வழக்கில் எதுவுமே செய்யாமல் இருக்கும் மாநில மகளிர் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 29 -ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே பாஜக சார்பில் போராட்டம் நடத்துவோம். மக்களின் போராட்டத்தை பார்த்து மாநில அரசாங்கம் பயப்படுகிறது. இதனால் மக்களின் குரலை இந்த அரசு மொத்தமாக நசுக்க நினைக்கிறது.
ஆனால், மேற்கு வங்க மக்களும் மாணவ சமுதாயமும் விழித்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்கை மெத்தனமாக கையாண்ட மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இருந்து அகற்றி, மக்கள் கங்கையில் மூழ்கடிப்பார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.” என கூறியுள்ளார்.