கருணாநிதி நாணயம் வெளியீடு விழாவை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக.,வுக்கும் பாஜகவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உதயநிதி, பிரதமர் மோடியை சந்தித்தத்தில் இருந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. கருணாநிதி சிலையை வெங்கய்யா நாயுடுவை அழைத்து வந்து திறந்தார்கள். சோனியாவையோ, ராகுலையோ அழைக்கவில்லை.
லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கம் அதிமுக.,வை மட்டும் குறிவைத்து இருந்தது திமுக.,வை எதிர்க்கவில்லை. திமுகவினருக்கு எதிராக ஊழல் பைல்ஸ் வெளியிட்டார் கவர்னரிடம் மனு அளித்தார். ஆனால் அது தொடர்பாக ஒரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதன்பின்னர் வலியுறுத்தினாரா? இல்லை. அதெல்லாம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வருகிறது. வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்.பி.,க்கள் டில்லி சென்றார்கள். அங்கு ஒரு வெற்றி கூட்டம் நடந்தது. அதில் ஜே.பி. நட்டாவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.
இயக்குநர் விக்ரமன் திரைப்படங்கள் மாதிரி ஒரு குடும்ப சென்டிமென்ட் நிகழ்ச்சியாக நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுகவும், பாஜகவும் அண்ணன், தம்பி போல் குடும்ப விழாவாக அதை நடத்தினர். ஸ்டாலின் எப்போதும் கருப்பு பேண்ட் தான் போடுவார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சந்தன நிற பேண்ட் போட்டு சென்றுள்ளார். கருப்பு பேண்ட் போட்டால், கோ பேக் மோடி, கோ பேக் ராஜ்நாத் சிங் என்பது போலாகிவிடும்.
முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். இது 50 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கட்சி; 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது. எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்துப் பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026-ல் தனியாக நின்று ஒரு சீட் தனியாக நின்று ஜெயித்து பாருங்கள்; முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.