முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 15 புதிய தொழில் திட்டங்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் 15 நிறுவனங்கள் ரூ.44,125 கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு பல புதிய முதலீடுகள் வரப்பெறுவதோடு, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இதேபோல், எரிசக்தி துறை சார்பாக தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் – கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் – கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.