தொல். திருமாவளவன்: எனக்கு நம்பர் முக்கியமல்ல. நான் ஏற்றுகொண்டிருக்கிற கொள்கை தான் முக்கியம்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடலூர் மாவட்டம், வேப்பூரில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணி கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, “தேசிய அளவில் வியூகம் அமைத்து, எடப்பாடியையோ, அதிமுகவையோ எதிராகக் கருதாமல், தேசிய அளவில் பாஜகவை, மோடியை வீழ்த்தவேண்டும் என்ற முயற்சியில் 28 கட்சிகள் அடங்கிய கூட்டணி தான் இண்டியா கூட்டணி. அந்தக் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. திமுக தலைமையிலான கூட்டணி அமைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்ட்டது.

எதிரணியில் 5 சீட் கிடைக்கும், திமுகவோடு இருந்தால் 2 தான் கிடைக்கும். எனவே அணி மாறுவார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை எனக்கு நம்பர் முக்கியமல்ல. நான் ஏற்றுகொண்டிருக்கிற கொள்கை தான் முக்கியம் என தொல். திருமாவளவன் பேசினார்.