நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒட்டுமொத்த நாடும் இந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயர் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று தெரிவித்தார். இந்த தேர்தல் அறிக்கை ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
1. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
2. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தப்படும். அதையொட்டி, நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
3. 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
4. 2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.
5. 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்
6. திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
7. இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்
8. மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
9. அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
10. முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
11. ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.
புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் வெளியிடப்பட்டது.