நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக ககென் முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ககென் முர்மு தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதோடு வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சஞ்சல் பகுதியில் அமைந்துள்ள சிஹிபூர் என்ற கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த சமயத்தில் இவர், அங்கிருந்த இளம்பெண்ணிடமும் வாக்கு சேகரித்து, அவருக்கு திடீரென முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி பல கண்டனங்களை எழுப்பி வருகின்றன. இதுகுறித்து பாஜக வேட்பாளர் பேசுகையில், “அந்த பெண் எனது உறவுக்கார பெண் ஆவார். அவர் எனக்கு குழந்தை மாதிரி. யாரும் குழந்தையை முத்தமிடுவது தவறல்ல. பெண்களை நான் தாயாகவே பார்க்கிறேன். என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.