தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரம் மேல், மேப்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நடைபயணம் சென்றார். இதற்காக, பாஜவினர் பல இடங்களில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கொடிகள், பேனர்களை சாலையோரங்களில் வைத்திருந்தனர்.
இரவு 7 மணிக்கு அண்ணாமலை வருவார் என தெரிவித்த நிலையில் இரவு 9.30 மணிக்கு மேல் அண்ணாமலை வந்தார். இதற்காக பூவிருந்தவல்லி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நசரத்பேட்டை, அகரம் மேல், மேப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டது.
வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடந்து போக மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை வழியாக பல கி.மீ. தூரம் சுற்றி ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நசரத்பேட்டையில் இருந்து அகரமேல் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே அண்ணாமலை வேனில் இருந்தவாறு பேசினார். இதனால் போக்குவரத்து தடைபட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வசைபாடியபடி சென்றனர்.