உத்தப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்நிலையில் பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த கூட்டு திருமண நிகழ்வில் திருமணத்தில் ஏழைப் பெண்களுக்கு ரூ35 ஆயிரம் பணம், ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என்று உ.பி உத்தப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்தார்.
ஆனால் இந்த திருமணத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தினர். மேலும், ஏராளமான பெண்கள் ஜோடி இன்றி தனியாக நின்றனர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை, தாங்களே அணிந்துகொண்டனர்.
சிலர் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அந்தப் பெண்களிடமும், இளைஞர்களிடமும் பண ஆசை காட்டி, அவர்களையும் மணமக்களாக நிறுத்தினர். அவர்கள் அங்கு உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மாலையுடன் முன்பின் தெரியாத பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களுக்குத் தாங்களே மாலையை அணிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர். 588 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது போல புகைப்படத்தைக் காட்டி அரசிடம் பணம் பெற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போலி திருமணத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது.
இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அரசு உதவித்தொகையை அபகரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் போலி ஜோடிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட திருமண விழாவின் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக மணப்பெண், மணமகனாக படித்தவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது அம்பலமானது. திருமணம் பார்க்க வந்த சில இளைஞர்களை பணம் கொடுத்து மணமகனாக நடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.