”பாஜக ஆட்டம் இன்னும் சில மாதங்கள் தான்..! கவுண்ட் டவுன் சொன்ன மு.க. ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது மூலமாக தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது சொன்னாரே, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.

பா.ஜ.க. தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம். புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பா.ஜ.க. பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான IRS அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம் – சமூக நீதி – மதச்சார்பின்மை – அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது. தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-விற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது.” என தெரிவித்தார்.