நாங்கள் இந்தியர்கள் இல்லையா? மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் மவுனம்

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையேயான இம்மோதல் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோரை அகதிகளாக்கி இருக்கிறது. 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் மணிப்பூரில் நாள்தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங்கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் மணிப்பூர் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இம்பாலில் நேற்று பெண் வர்த்தகர்கள் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் போது Huirem Binodini Devi என்ற சமூக ஆர்வலர் கூறியதாவது: 2 மாதங்களுக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடருகிறது. ஆனால் மணிப்பூர் மக்களுக்காக மத்தியில் ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை.

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் இந்த மவுனம் எங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா போன்ற தலைவர்கள் இப்படி கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவது நாங்கள் இந்தியர்களே இல்லை என்ற உணர்வை உருவாக்குகிறது. மணிப்பூர் மக்களும் இந்திய குடிமக்கள்தான். எங்களுடைய உணர்வுகளை மத்திய அரசு கேட்க வேண்டும். இந்தியாவுடன் இணைவதற்கு முன்னர் மணிப்பூர் மக்கள் வாழ்ந்த அமைதி நிலை எங்களுக்கு வேண்டும் என தெரிவித்தனர்.