பாஜக குழுவில் இருந்து மேனகா காந்தி, வருண்காந்தி உள்ளிட்ட பல தலைவர் திடீர் நீக்கம்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.