அமித் ஷாவை ராஜினாமா செய்ய சொன்ன பெண் பேராசிரியர் மீது தேசதுரோக வழக்கு!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்ட லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் மாத்ரி ககோட் என்ற மெதுசா மீது உத்தரப்பிரதேச மாநில அரசு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ஆம் பிற்பகல் 3 மணி அளவில் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த கொடூரப் படுகொலை நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அதேநேரத்தில் 2,000-க்கும் அதிகமானோர் கூடும் சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் செய்யபடவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன. டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது உண்மை என மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பஹல்காம் படுகொலை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் மாத்ரி ககோட் என்ற மெதுசா தமது எக்ஸ் பக்கத்தில் , ஒருவரது மதத்தைக் கேட்டு சுட்டுப் படுகொலை செய்வது பயங்கரவாதம்தான்.

அதேபோலவே, மதத்தின் பெயரால் மதத்தைக் கேட்டு கும்பல் படுகொலைகளை நிகழ்த்துவது, மதத்தின் பெயரால் வீடுகள் தர மறுப்பது, பணியிடங்களில் வேலைவாய்ப்புகளைப் பறிப்பது, வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிப்பதும் கூட பயங்கரவாதம்தான். இந்த பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு; அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வீடியோ ஒன்றை மெதுசா பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மெதுசா மீது புகார் கொடுத்தது. அந்த புகாரி, மெதுசா, தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்; நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார். மெதுசா எப்போதும் காவி பயங்கரவாதம் குறித்து விமர்சிக்கிறார். டாக்டர் மெதுசாவின் எக்ஸ் பதிவு பாகிஸ்தானியர்களால் கொண்டாடப்படுகிறது என குற்றம்சாட்டி இருந்தார். இதனடிப்படையில் தற்போது மெதுசா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.