காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதி தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது, உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என முன்னாள் அதிமுக MLA-வான S.V. சேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.
இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.
இங்கு கடந்த 22- ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் தனியார் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை அமைச்சர்கள் சிவசங்கர், தாமோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் S.V. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து S.V. சேகர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதி தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது, தீவிரவாதம் நடந்தால் தீவிரவாதம் என கூற வேண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் பயங்கரவாதிகள் எனக் கூற வேண்டும். மனித நேயத்தின் உச்சகட்டமாக உதவி செய்த உள்ளூர் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார்
உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட ஒரு சில மதத்தை வைத்து அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவது தவறு. தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம், பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என S.V. சேகர் தெரிவித்தார்.