பொன் விக் அணிந்து “பொன்முடி”கைது செய்ய நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் பொன் விக் அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் தன்னுடைய கருத்துக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரினார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதிமுக மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை சார்பில் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோல்டு ஹேர் விக் அணிந்து வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பொன் நிற விக் அணிந்து வந்து பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.