சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுக்க அறியப்பட்ட நபராக இருந்து வரும் சாட்டை துரைமுருகன். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக சாட்டை துரைமுருகன் இருந்து வருகிறார்.
மேலும் சாட்டை துரைமுருகன் தனியாக யூடியூப் சேனல் சாட்டை என்ற பெயரில் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் அரசியல் கட்சிகளை விமர்சித்து அவ்வப்போது சாட்டை துரைமுருகன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சீமானிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை. அந்த யூடியூப் சேனலின் கருத்துகள், நாம் தமிழர் கட்சியின் கருத்துகள் இல்லை என கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் பயோவில், திடீரென நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்பதையும் நீக்கி இருந்தார். அத்துடன் முகப்புப் படமாக கட்சி சாராத ஒரு படத்தை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறாரா? வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளாரா? என இணையத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதம் அதிகரித்தது. எனினும், சீமானின் அறிக்கை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து 2 முறை ஏற்கனவே நீக்கப்பட்டேன்.
சீமானின் தம்பியாகவே இருப்பேன் அப்போது நான் பாடம் கற்றுக் கொண்டேன். இதேபோல 5 ஆண்டுகளுக்கு முன்னரும் என்னுடைய யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்திருந்தார். இப்போதும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் வேறு கட்சியில் இணைய போவதாக பரவும் தகவலில் உண்மையில்லை. நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே இருப்பேன்.
மேலும் சீமானுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யவே மாட்டேன். துரோகம் என்பது என் மரபணுவிலேயே கிடையாது. தமிழ்த் தேசியத்துக்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்” என்று கூறியிருந்தார். எனினும், சீமான் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, உண்மையிலேயே அது சாட்டை துரைமுருகனின் தனிப்பட்ட யூடியூப் சேனல். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர் பேசுறார்.. உஙக்ளுக்கு தெரியாமல் எப்படி பேசுவார்.. இப்படி பக்கத்தில் நிற்கிறார்.. அவர் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது. அதை தெளிவுபடுத்தவே அப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. உங்களுக்கு தெரியாமலா பேசுகிறார்.. நீங்கள் சொல்லாமலா பேசுகிறார் என்று கேட்டால்.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது. அது ஒரு கருத்தை வைத்து இருக்கிறார். அந்த கருத்தை வலையொளியில் பதிவிடுகிறார். இதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கொடுக்க வேண்டியது ஆகியுள்ளது என சீமான் தெரிவித்தார்.