பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அட்வைஸ் கொடுத்துள்ளார். கரூர் மாவட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான மோதல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் போதே தொடங்கிவிட்டது.
ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரும் ரஃபேல் வாட்ச் விவகாரம், விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தை வைத்து அண்ணாமலையை செந்தில் பாலாஜி சாடினார். அதேபோல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்நிலையில் மீண்டும் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார். கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி பேசுகையில், பெரியார் கருத்துகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் கோயம்புத்தூரில் பெரியார் மாநாடு நடத்தப்படும்.
பாஜகவினர் ஏதோ ஒரேயொரு தொகுதியில் வென்றுவிட்டதால், கோயம்புத்தூரே அவர்களுக்கு சொந்தம் என்பதை போல் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் எப்போதும் பெரியார் மண், திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். கோயம்புத்தூரில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வென்றுவிட்டதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெல்லலாம் என்று நினைத்தார்கள்.
ஆனால் சட்டமன்றத் தேர்தலில் உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு.. நாடாமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என்று வந்தார்கள்.. தம்பி.. இந்த ஊரும் பெரியார் மண்தான்.. உனக்கு அங்கேயும் வேலையில்ல.. இங்கேயும் வேலையில்ல. தமிழ்நாட்டில் இனி எங்கேயும் வேலையில்லை என்று கூறிவிட்டனர். உலகத்திலேயே நான்தான் அறிவாளி என்று நினைத்து கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு.. ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டார்.
சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல், செருப்பு போட மாட்டேன் என்று புது கதையை சொன்னார். சபதம் எடுப்பதில் அட்வைஸ் தம்பி, தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இனி வாழ்நாள் முழுக்க உன்னால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாநிலத் தலைவர் என்ற பதவியை எடுத்துவிட்டால், அதிக நாட்கள் அங்கு இருக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்.
ஆனால் என்னிடம் கேட்டால், அவர் அங்கேயே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. அரசியலுக்கு வந்துவிட்டால் சில ஆண்டுகளிலேயே உச்சத்தை எட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த பட்டியலில் செருப்பு போடாமல் சாட்டையடித்து கொண்டவரும் இருக்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று உழைத்து இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.