உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.