1965 -ஆம் ஆண்டின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வரலாற்றை தெரிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் புகழேந்தி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் இந்தி புகுத்தும் பாணியில் ஒரே கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறது
தமிழகம் ஏற்க மறுப்பதை ஒப்புக்கொள்ள முடியாது. கல்வி நிதி வழங்க முடியாது என்றெல்லாம் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். 1965 -ஆம் ஆண்டின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வரலாற்றை தெரிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உலகத்திலேயே இந்தியா என்கின்ற நாட்டிலே உள்ள தமிழ்நாடு என்கிற மாநிலம் மாத்திரம் தான் மொழிக்காக போராடிய வரலாற்றை பெற்றது. எண்ணற்ற தலைவர்கள் மொழி போருக்காக இன்னுயிரை தியாகம் செய்தார்கள்.
எனது தந்தையார் கூட ஆறு முறை சிறை சென்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என எங்களை வளர்த்தவர்கள் தமிழ் மொழிக்காக போராடி பெருமை சேர்த்தவர்கள். அண்ணா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது இந்தி தான் ஆட்சி மொழியாக வேண்டும் என்று வடக்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.
இரண்டு நாள் தொடர்ந்து நடந்த அந்த அமளிக்கு பின்னர் அறிஞர் அண்ணா, வடக்கே பல மாநிலங்களில் இந்தி பேசுவதாலேயே அதனை திணித்து விட முடியாது. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. காக்காய் பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அதனால் காக்காவை நாம் தேசிய பறவையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வண்ண தோகை விரித்தாடும் மயிலை தான் தேசிய பறவையாக ஏற்றுக் கொண்டோம்.
எங்கள் தாய்மொழி தேசிய பறவைக்கு சமமானது. உங்களது மொழி காக்கைக்கு சமமானது என்று திரும்ப பதில் அளித்தார்கள். திராவிட இயக்கத் தலைவர்கள் போராடிய பின்னர் இந்தி மொழி ஆட்சி மொழி அல்ல என்கின்ற சட்டம் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது இதையெல்லாம் மறந்துவிட்டு இந்திக்கு ஆதரவாக பேசுவதும் திணிக்க முயல்வதும் சுதந்திரம் ஆகாது. அதிமுக தலைவர்கள் இதனை வேடிக்கை பார்க்கிறார்கள். மாநிலத்தில் ஆளுகின்ற அரசு இதனை எதிர்க்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டு இருக்கிறது.
திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் எதிர்க்கிறார்கள். அதிமுக தலைவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நானே எனது தலைமையில் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்டி இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பேன். அதுதான் அதிமுக தொண்டர்களின் உரிமை குரலாக இருக்கும் இவர்களைப் பற்றி கவலை இல்லை என புகழேந்தி தெரிவித்தார்.