கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை மத்திய அரசு உறிஞ்சுவதாகச் சாடினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு ஆளும் தரப்பு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.
அதேநேரம் எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட் குறித்து ஏற்கனவே நாங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளோம். நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருக்குறளை பட்ஜெட் உரையில் வாசித்தார். குரள் வாசித்தீர்கள் ஓகே.. ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையே. பணம் கொடுக்கவில்லையே. திருக்குறள் இருக்கிறது.. ஆனால் நிதி இல்லை.
அதேபோல பட்ஜெட்டில் விமானத்துறை குறித்துப் பேசினார்கள். ஆனால், ரயில்வே என்ற வார்த்தை கூட இல்லை. தமிழகத்திற்கு எந்தவொரு சிறப்பு ரயில் திட்டமும் அறிவிக்கவில்லை. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் விமானத்தில் பயணிப்போர் வெறும் 2 கோடி பேர் தான். அவர்களுக்காக 10 ஆண்டுகளில் 100 விமானங்களை அமைப்பதாகச் சொல்வீர்கள்.
ஆனால், அதை விடப் பல மடங்கு அதிகமான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள்.. அவர்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என யாருக்கும் எந்தவொரு சிறப்புத் திட்டமும் இல்லை. ஒருங்கிணைந்த திட்டமும் இல்லை. அரைச்ச மாவையே அரைப்பது போல இவர்கள் திட்டங்கள் உள்ளன. இது ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது.
வருமான வரி விலக்கை 12 லட்ச ரூபாயாக உயர்த்திவிட்டதாகப் பெருமை பேசுகிறீர்கள். ஒருவேளை ஒருவர் 13 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால்.. அந்த கூடுதல் ஒரு லட்சத்திற்கு மட்டும் தானே வரி விதிக்க வேண்டும். ஆனால், 12 லட்சத்திற்கும் வரி விதிப்பேன் என்றால் எப்படி ஏற்பது. ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை வருமான வரி என்ற பெயரில் உறிஞ்சுகிறது.
ஒருவர் ரூ.12 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் அந்த கூடுதல் தொகைக்கு மட்டுமே வரி போட வேண்டும். 12 லட்சத்திற்குப் பதிலாகக் கூடுதலாக ஒரு லட்சம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக மொத்தமாக வரி விதிப்பது சரியான போக்கு இல்லை. இது சம நீதியா.. இது சம நீதியும் இல்லை. சமூக நீதியும் இல்லை.. பெட்ரோல், டீசலுக்கான வரி எல்லாம் அவர்கள் கீழ் தான் வருகிறது.
அதை ஏன் அவர்கள் குறைக்கவில்லை. அதையெல்லாம் குறைக்க மாட்டார்களாம்.. வருமான வரியை மட்டுமே குறைப்பார்களாம். 120 கோடி பேரில் வெறும் 4, 5 கோடி பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்துவார்கள். அவர்களுக்குச் சலுகை தருகிறார்களாம். அப்போ மற்றவர்களுக்கு என்ன சலுகை தருவார்கள்? இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை. பீகாரை மையப்படுத்திப் போடப்பட்ட பட்ஜெட் போலவே இருக்கிறது. எங்களின் வரி பணத்தைப் பீகாருக்கு மட்டும் தான் தருவார்களாம்.. தமிழர்களுக்கு அப்போ என்ன இருக்கிறது” என்று அவர் மிகக் கடுமையாக ஜெயக்குமார் விமர்சித்துப் பேசினார்.