அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். மகாத்மா காந்தி தலைமையில் கடந்த 1924- ஆம் ஆண்டு டிசம்பர் 27 -ஆம் தேதி நடந்த மாநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பெலகாவியில் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு, நேற்று பெலகாவியில் நடந்தது.
பெலகாவி சிபிஇடி மைதானத்தில் நடந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசுகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்த வரலாறு நமக்கு உண்டு. ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள் நாம் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற உயிரை விடவும் நாம் தயாராக இருக்கிறோம். தீய அரசுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். எங்களுடன் இணைந்து போராட மக்களாகிய நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்தார். இப்படியொரு அரசையும், அமைச்சரையும் இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.