சீமான்: திமுகவினரிடம் ரெய்டும் ஏன் வரவில்லை..! வராது கப்பம் சரியாக கட்டரங்க..!

ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் என சீமான் தெரிவித்தார்.