தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது? கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எளியோர் எழுச்சி நாள்’ என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 ஜோடிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?
கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.
எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.