சி.வி.சண்முகம் கேள்வி: இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா..!?

இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என  சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினர்.  விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் அவ முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று காலையில் விருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியாமல் போனதால் மதியம் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயிலில் முன்பு சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்திய மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும் அதுகுறித்து, அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி என்பதால் நியூஸ் ஜெ சேனலும் மறுப்புச் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமயங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாரின் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்குப் பதிவுசெய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. நான் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தும் அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான நான் அளிக்கும் புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என்று அவர் கேள்வி எழுப்பினர். பின்னர், விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் செல்வவிநாயகம், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சி.வி.சண்முகத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அந்த சமாதானத்தை எல்லாம் ஏற்காத அவர், “காவல் கண்காணிப்பாளரை நேரில் வரும் வரை தர்ணா போராட்டம் தொடரும்,” எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் தாலுகா காவல்துறை அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.