கீதாஜீவன்: “பெண்கள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டுவதில் பெரும்பங்கு வகிப்பார்கள்”

“தமிழகம் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட பெண்கள் பெரும்பங்காக இருப்பார்கள்,” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து 3 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டு, தற்போது திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பை உருவாக்கும் வகையில், பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போற்றப்படும் போது, உலக பொருளாதாரத்தில் 20 சதவீதம் உயரும் என உலக வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் பணியாற்ற தடையாக இருப்பவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டைவிட்டு வெளியூரில் பணியாற்றும் பெண்களுக்காக தோழி விடுதி திட்டம், கட்டணமில்லா பேருந்துப் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் அந்த தொகையை சேமித்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படுத்துவதாக மாநில அரசின் திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குடும்பத்தில், சமூகத்தில் மதிப்பு உயர்கிறது. மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் வேலை செய்யும் பணியிடங்களில் உள்ளக புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 22 ஆயிரத்து 345 அரசு மற்றும் தனியார் பணியிடங்களில், இந்த புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. பாலின சமத்துவம் பற்றி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு கவுன்சலிங், சட்ட உதவி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை, வன்கொடுமை இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். ஜவுளித்துறையை மேம்படுத்திக் கொண்டே, சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை நாம் வளர்த்துக் கொள்ளலாம். முதலமைச்சரின் கனவான 2030-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை, எட்ட பெண்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள்,” என கீதாஜீவன் பேசினார்.