எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்..!

கூட்டணி கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்து விடும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.