பெங்களூரு புகழேந்தி: அதிமுக தலைவர்கள் பலர் பாஜகவுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள்..!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எக்மோர் ரயில் நிலையத்துக்கு பெரியார் ரயில் நிலையம் எனபெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சசிகலா அவ்வப்போது வெளியில் வந்து, அதிமுகவைச் சேர்த்து வைக்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று விடுகிறார். எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு, அதிமுக தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை அழைத்து சசிகலா பேச வேண்டும். அதிமுகவில் பல்வேறு பதவிகளை அனுபவிப்பவர் கே.பி.முனுசாமி. அவருக்கு எதுஅனுகூலமோ, அவரை எது வாழவைக்கிறதோ, எங்கு அவருக்கு வரவேற்பு இருக்கிறதோ அங்கு சேர்ந்து கொள்வார் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

மேலும் பேசிய பெங்களூரு புகழேந்தி, வரும், 2026-ல் அதிமுக., தோல்வியடைந்தால் எங்களையும் சேர்த்து தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பர். பொறுப்பை உணர்ந்து, தொண்டர்களின் கருத்தை மதித்து, நடக்க வேண்டும். பல அதிமுக., தலைவர்கள் பாஜகவுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். அதிமுகவினர் பார்க்காத பணமில்லை. அனைத்தையும் அனுபவித்து விட்டனர். கட்சியை காப்பாற்றுங்கள். பிரஸ்டீஜ் பார்க்காதீர்கள் என வலியுறுத்துகிறோம் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.