பேருந்து, தொடர்வண்டி நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களிலும் கூட லாட்டரிச் சீட்டுக்களை கூவிக் கூவி விற்பதும் தமிழகத்தில் அன்றாட காட்சிகளில் ஒன்று. சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல மாநில லாட்டரிச் சீட்டுக்களும் தமிழகத்தில் தினசரிப் புழக்கத்தில் இருக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் மக்கள் எவ்வளவோ பேர், இந்த முறை எப்படியும் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் தினமும் லாட்டரிச் சீட்டுக்களை வாங்கி தாங்கள் வாங்கும் சம்பளத்தின் பெரும்பாலான பணத்தை லாட்டரிச் சீட்டுக்கள் வாங்குவதற்கே செலவழித்துக் கொண்டிருக்க, இதனால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்த கதைகளும் உண்டு.
இப்படி ஏமாந்து கொண்டிருப்பவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டே பணம் குவித்த லாட்டரிக் கடைக்காரர்களும் தமிழகத்தில் உண்டு. சிறுவர்கள், சிறுமிகள், வயோதிகர்கள் மட்டுமில்லாமல் கண்களை இழந்தவர்கள் கூட லாட்டரி விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இப்படி தமிழகத்தில் கொடிகட்டி பறந்தது லாட்டரி சீட்டு விற்பனையால் கடன் தொல்லையால் உயிரையும் மாய்த்து கொண்டனர் நூற்றுக்கணக்கான அப்பாவிகள்.
இதற்கு பிறகுதான் 2003 ஜனவரி 9 ம் தேதி தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் “3-ம் நம்பர்” என்ற 3 இலக்க எண்களை கொண்ட ஆன்லைன் வழி லாட்டரி அறிமுகமானது. எண்களை கொண்டு நடைபெறும் விற்பனை முறை இதுவாகும். இந்த முறை 3 நம்பர் லாட்டரி முறையானது, முற்றிலும் கற்பனையானது. லாட்டரி சீட்டை விற்பனை செய்வது போலவும், அதை வாடிக்கையாளர்கள் வாங்கு போலவும் இருக்குமே தவிர, எதிர்பார்த்த பலனை தராது.
அரசால் தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் லாட்டரி மறைமுகமாக விற்பனையாகி வருவதும், அதில் பணத்தை இழந்து குடும்பங்கள் சீரழிந்து வருவதும் தொடர் கதையாகிவிட்டது. ஆனால், சேலம் மாவட்டம் ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் ஒரு நம்பர், மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த லாட்டரியால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்களும் எழுந்தன.
எனவே, ஓமலூர் காவல்துறை கண்காணிப்பு பணியை தீவிரமாக்கினார்கள்.. அப்போது, ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில், ஒரு பெண் செல்போன் போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதை கையும் களவுமாக காவல்துறை கண்டுபிடித்தனர். தர்மபுரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் மனைவி 50 வயதான மனோன்மணி என்பது தெரிய வந்தது. ஆனால், மனோன்மணி ணவரை பிரிந்து 10 வருடங்களாக ஓமலூர் புளியம்பட்டி, தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
பாஸ்கர் ஆரம்பத்தில் தேமுதிகவில் இருந்தவர்.. அந்த கட்சி சார்பாக போட்டியிட்டு, எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். பிறகு தேமுதிகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய நிலையில், மாவட்ட தலைவராக இன்று உயர்ந்துள்ளார் பாஸ்கர். இவரது மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் கைதாகியிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.