2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா, ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார். அந்தவகையில் இந்த முறையும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது, “ஏன் இருக்கோம், எதுக்கு இருக்கோம்னே தெரியாம ஒரு கூட்டணி சேர்ந்திருக்காங்கன்னா அது பாஜக கூட்டணி தான். அந்தக் கூட்டணியில் யாருக்கும் யாருக்கும் சம்பந்தமே இல்லை.
ஜிகே வாசன், ஜான் பாண்டியன், அன்புமணி ராமதாஸ், பச்சைமுத்து, சரத்குமார்.. இவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து என்ன ஆகப்போகுது? மோடி வந்த பிரச்சார மேடையில் இவர்கள் எல்லோரும் வரிசையாக நிற்கும்போது “பிள்பிளிக்கி பிளாப்பி” காமெடி தான் ஞாபகம் வந்தது. தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப்போகுதோ தெரியலை.
பாரதிய ஜனதா கட்சியில் சரத்குமார் சேர்ந்த டீலிங் தெரியுமா? சரத்குமார் கட்சியில சேரப் போகும்போது நோட்டு எவ்வளவு? சீட்டு எவ்வளவுன்னு அண்ணாமலை குப்புசாமிகிட்ட கேட்டிருக்காரு. அண்ணாமலை குப்புசாமியோ உங்க கட்சி எவ்வளவுன்னு கேட்க, அந்த டீலிங் சரத்குமாருக்கு பிடிச்சுப்போய்விட்டது.
உடனே, விருதுநகர நான் வச்சுக்கிறேன். என் கட்சிய நீங்க வச்சுக்கோங்கன்னு கொடுத்திட்டாரு. மறுநாள் மனைவி ராதிகா சரத்குமாரை அழைச்சுக்கிட்டு அண்ணாமலை குப்புசாமி வீட்டுக்குப் போயிருக்காரு சரத்குமார். என்னங்க கட்சிய இணைச்சுட்டு ரெண்டு பேரு மட்டும் வந்திருக்கீங்கன்னு கேட்டாரு… நாங்க ரெண்டு பேரும் தான் கட்சின்னு சொன்னாராம் சரத்குமார் என விந்தியா பேசினார்.