குணால் கம்ரா தனது கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்தினார். அவர் உண்மைகளை கூறினார். பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார்.
மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இந்த வீடியோவை, சிவ சேனா இளைஞரணியினர், குணால் கம்ரா தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபித்தது. இந்நிலையில், மும்பையிலுள்ள விதான் பவனில் செய்தியாளர்களின் கேள்விக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்தார். அப்போது, “குணால் கம்ரா தனது கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்தினார். அவர் உண்மைகளை கூறினார். பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதித்த சோலாபுர்கர் மற்றும் கோரட்கர் ஆகியோர் மீது இந்த துரோகிகள் நடவடிக்கை எடுக்கவில்லை,” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், சத்ரபதி சம்பாஜி மகாராஜ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாக்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கோரட்கர் மற்றும் நடிகர் ராகுல் சோலாபுர்கர் ஆகியோர் தெரிவித்ததை அடுத்து, அவர்களை கைது செய்யக் கோரி மாநிலத்தில் நடந்த போராட்டங்களை உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியின் தொண்டர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.