ஹரியானாவில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில் இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி என நான்கு முனை போட்டி நிலவியது.
இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை ஆரம்ப நிலவரத்தின்படி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், பாஜக 30 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாகத் தெரிய வந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை படிப்படியாக குறைய தொடங்கி பாஜக முன்னிலை பெற தொடங்கியது. தற்போதைய நிலவரத்தின்படி பாஜக 48 தொகுதிகளிலும் காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் அக்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜெயராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விரக்தி அடைய தேவையில்லை. ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை. மைண்ட் கேம்கள் விளையாடப்படுகின்றன. நாங்கள் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. ஆட்சி அமைப்பதற்கான ஆணையை நாங்கள் பெருவோம். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.